பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று (ஏப். 6) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்குச் செல்கிறார்.பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் மோடி தொடங்கிவைக்கிறார். பின்னர் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கப்பட்டு, கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் புதிய பாலத்தை கடந்து செல்வதை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

பிறகு பகல் 12.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.பிற்பகல் 1.30 மணியளவில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, ரூ.8,300 கோடி மதிப்பிலான வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை நான்கு வழிச் சாலை, விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச் சாலை, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம் நான்கு வழிச் சாலை, சோழபுரம்-தஞ்சாவூர் நான்கு வழிச் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறனர். பிரதமர் வருகையையொடி ராமேஸ்வரத்தில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் பகுதியில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,;புனிதமான ராமநவமி நாளில் தமிழகத்தில் எனது சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்து வைக்கப்பட உள்ளது. ராமநாத சுவாமி ஆலயத்தில் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கிவைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: பிரதமர் வருகை எதிரொலி.. மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லத் தடை.. ட்ரோன் பறக்கவிடவும் தடை..!