மதுரை மாநகர் வைகை கரையோரம் அமைந்துள்ள நெல்பேட்டையில் உள்ளது சுங்கம் பள்ளிவாசல். இதன் முன்புறம் உள்ள கல்வெட்டை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம், இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் தாசன், பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சார்ந்த உதயகுமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
இந்த கல்வெட்டு ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான தனி துண்டுக் கல்லாலானது. இதில் ஐந்து வரிகளில் 'சுங்கச்சாவடி சந்து வெளிவீதி' என்று எழுதப்பட்டு உள்ளது. 1836 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் வாசித்து பொருள் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் கூறுகையில், '' சுங்கம் என்பது வெளியிடங்களில் இருந்து இறக்குமதி ஆகும் அல்லது ஏற்றுமதியாகும் வணிகப் பொருள்கள் மற்றும் நுகர்வு பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காகவும், ஒப்பந்த அடிப்படையில் மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாவலர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டதாக இந்த இடம் சுங்கம் வசூலிக்கும் இடமாக இருந்திருக்கலாம்.
இதையும் படிங்க: பாமகவுக்குள் வெடித்த பூகம்பம்; பொங்கியெழுந்தவர்களை பொசுக்கென அமைதிப்படுத்திய அன்புமணி..!

இங்கே இப்பொழுது ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. தமிழகத்திலிருந்து பட்டு துணிகள், முத்து, தந்தம் போன்ற ஏற்றுமதியான பொருள்களுக்கு சங்க இலக்கியக் காலத்தில் இருந்து சுங்கம் வசூலிக்கப்பட்டதை பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை, திருக்குறள் போன்றவற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சுங்கச்சாவடி என்பது வரி வசூல் செய்யும் மையமாக மட்டும் அல்லாமல் கடத்தலை தவிர்க்கவும், நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.

மதுரை - கேரளவுக்கு செல்லும் பெருவழியில் உள்ள குன்னுவாரன்கோட்டை என்ற இடத்தில் சுங்கவரி வசூல் மையம் இருந்துள்ளதை அங்கிருக்கும் சிவன் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது என்றார்.

தற்போது பள்ளிவாசல் முன்பு கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு அந்தக் காலத்தில் நிலவிய சுங்க நடைமுறை குறித்து தெளிவுபடுத்துகிறது. இப்போதும் நெல்பேட்டை பள்ளிவாசலுக்கு சுங்கம் பள்ளிவாசல் என்ற பெயர் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பழுதாகி நின்ற 2 விமானங்கள்.. அவதியில் தத்தளித்து நின்ற பயணிகள்!