1914 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 110 ஆண்டுகளை கடந்த நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததால் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக இலங்கை அனுராதபுரத்தில் இருந்து எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மண்டபம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.
இதையும் படிங்க: பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் மோடி.. வேட்டி, சட்டையில் அசத்தலாக காட்சியளித்த பிரதமர்..!

பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் கலந்து கொண்டார். அப்போது, ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதையும் படிங்க: பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி..! காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!