இலங்கைக்கு ஏப்ரல் 5ம் தேதி செல்லும் பிரதமர் மோடி 5 முக்கியத் திட்டங்களில் கையொப்பமிடுகிறார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி 6ம் தேதி வருகிறார்.
கடவுள் ராமர் பிறந்தநாளாகக் கருதப்படும் ராமநவமியன்று ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி அங்கிருந்து பாம்பன் சென்று புதிதாகக் கட்டப்பட்ட பாம்பன் ரயில்பாலத்தையும் திறந்து வைக்கிறார்.

கடந்த 2024ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு முன்பாக ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி தனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. பிரதமருக்கு கடிதம் அனுப்பும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
இந்த முறையும் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தபின், புதிதாகக் கட்டப்பட்ட பாம்பன் ரயில்பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவிலேயே செங்குத்தாக திறக்கும் முதல் ரயில்வே பாலம் இதுவாகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில்பாலம் காலநிலை, கடல்காற்று ஆகியவற்றால் அடிக்கடி சேதமடைந்தது. இதையடுத்து, 2019ம் ஆண்டு இந்த பாலத்துக்குப்பதிலாக புதிய பாலத்தைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஏறக்குறைய 2.08 கி.மீ தொலைவுக்கு 18.3 மீட்டர் உயரத்தில் 99 தூண்கள், 72.5 அடி உயரத்தில் செங்குத்தாக திறக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு முன் இருந்த பழைய பாலத்தில் பெரிய கப்பல்கள், படகுகள் செல்வது கடினமாக இருந்தது, ஆனால், இப்போது செங்குத்தாக பாலம் திறக்கப்படும்போது, பெரிய கப்பல்கள், படகுகள் எளிதாகச் செல்ல முடியும்.
இந்த பாலத்தை திறந்து வைத்தபின் பிரதமர் மோடி, தமிழகத்தில் அஇஅதிமுக தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜேபி நட்டாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நேற்று பேசியுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து பேசப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாலும், கூட்டணி குறித்த பேச்சுகள் நடந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலுக்குப்பின் பாஜக, அதிமுக கூட்டணி உடைந்தது. அதன்பின் மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணிக்காக இணைவார்கள் எனத் தெரிகிறது. இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினைகள், சிக்கல்கள், எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான உரசல்கள் குறித்து கூட்டணிக்கு முன்பாக பேசப்படும் எனத் தெரிகிறது.
ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்து செல்லும் முன், தேர்தல் கூட்டணியை அதிமுகவோடு உறுதி செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பில் நியாயத்தை கடைபிடியுங்கள்.. எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக்கூடாது.. பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்..!