×
 

திருக்குவளை இல்லத்திற்கு திடீர் விசிட்... திமுக சீனியர் அமைச்சர்களை ஷாக்கில் ஆழ்த்திய அன்பில் மகேஷ்...!

திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை செலுத்தியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கையில் உரையாற்றவுள்ளார்.  இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வருகை புரிந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலைஞரின் பெற்றோர்களின் சிலைகளுக்கும், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் ‘கலைஞரையும் கல்வியையும் போற்றி எனது உரையைத் தொடங்குவேன்’ என எழுதினார். தொடர்ந்து அருகில் இருந்த கலைஞர் பயின்ற பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள வகுப்பறையில் அமர்ந்து ‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே…’ என எழுதினார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற பள்ளிக்கு சென்று எனது சட்டமன்ற உரையின் முதல் வரியை எழுதி, உரையின் இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கினோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலுக்கு பூனை காவலா? அதிமுக - பாஜக கூட்டணியை விளாசிய அன்பில் மகேஷ்!

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி வருகிற 24ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் கழகத் தலைவர் அவர்களின் மாணவனாக உரையாற்றவுள்ளோம். இதனை முன்னிட்டு தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா போன்றோர்களின் தலைமை மாணவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை இல்லம் சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினோம்.

தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற பள்ளிக்கு சென்று எனது சட்டமன்ற உரையின் முதல் வரியை எழுதி, உரையின் இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கினோம் எனக்குறிப்பிட்டுள்ளார். அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்த திடீர் திருக்குவளை விசிட் திமுக சீனியர் அமைச்சர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பதால் திமுகவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக திமுக மூத்த அமைச்சர்கள் இடையே புகைச்சல் நிலவி வருகிறது. குறிப்பாக முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் காட்டும் நெருக்கம், திருச்சியைப் பிரித்து அன்பில் மகேஷுக்கு பொறுப்பு வழங்கியது, அமைச்சரவையில் முக்கியமான பள்ளிக் கல்வித்துறையை வழங்கியது என அவர் மீது ஏற்கனவே சீனியர் அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். 

இதுவரை துறை ரீதியிலான ஒவ்வொரு மானியக்கோரிக்கையின் மீதும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து நேரடியாக சட்டமன்றத்திற்குச் செல்வதைத்தான் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அன்பில் மகேஷ் அனைத்து அமைச்சர்களுக்கும் டப் கொடுக்கும் வகையில் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். இதன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இதயத்திற்கும் அன்பில் மகேஷ் இன்னும் கொஞ்சம் குளோஸ் ஆகியிருப்பது கே.என்.நேரு, பொன்முடி போன்ற சீனியர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: இதை பொறுத்துக்கொள்ள முடியாது... பொங்கியெழுந்த அமைச்சர் அன்பில் மகேஷ் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share