நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் தேர்வில் முறைகேடா?.. தமிழக அரசு விளக்கம் அளிக்க பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்..
நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் தேர்வில் முறைகேடா?.. பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்..
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் விதத்தை வைத்துப் பார்க்கும் போது, முறைகேடுகள் நடைபெறுகிறதோ என்று ஐயம் ஏற்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 29, 30 ஜூலை 6 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றன. முடிவுகள் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக துப்புரவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் கடந்த ஜனவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்கள் நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். வழக்கமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்தவுடன் அனைத்து வகை தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகமோ முடிவுகளை அறிவிக்காமல் நேர்காணலில் பங்கேற்கத் தவறியவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, அவர்களை நேர்காணலுக்கு அழைப்பது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அன்புமணி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் காட்டும் திடீர் பாசம்... அன்புமணி ராமதாஸ் சுட்டும் பகீர் வேஷம்..!வன்னியர் வாக்குகள் யாருக்கு..?
நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டி.என்.பி.எஸ்.சி மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அண்ணா பல்கலைக்கழகம் தான் மிக மிக நேர்மையான அமைப்பா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆள்தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாக நடந்தன என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு தேர்வரும் எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு? நேர்காணலில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு? நேர்காணலில் அவர்களிடம் கேட்கப்பட்ட வினாக்கள், அதற்கு அவர்கள் அளித்த விடைகள், ஒவ்வொரு தேர்வரும் நேர்காணல் செய்யப்படும் காணொலி பதிவு ஆகியவற்றையும் நகராட்சி நிர்வாகத்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஓய்வூதிய திட்டத்திற்காக குழு அமைப்பது ஏமாற்று வேலை.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்