மாநாட்டுக்கு போகக் கூடாது.. துணைவேந்தர்களுக்கு உத்தரவு போடுங்க முதல்வரே.. ஒரே குரலில் திமுக கூட்டணி கட்சிகள்!
ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டும் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது
ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டும் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது என்று ஆளுநர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தும், இனி துணை வேந்தர்களை அரசே நியமிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து
ஏப்ரல் 17-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியிருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பதிவில், “துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும்.
திட்டமிட்ட இந்த மோதல் போக்கிற்கு குடியரசு துணைத் தலைவரும் துணை போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆர்.என். ரவியின் இந்தச் சட்டவிரோத துணை வேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்பதுடன், துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்” என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பல்கலை. வேந்தர் ஆளுநர்.. துணைவேந்தர்களை நியமிக்க முடியாதா.? பாலகுருசாமி காட்டம்!
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பதிவில், “ஆளுநரின் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி.. விளாசும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.!!