அரியவகை முகச்சிதைவு நோய் தான்யாவை நினைவிருக்கிறதா?.. மறக்காமல் வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யம் தம்பதியினரின் மகள் தான்யா.
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க உரிய வசதி இல்லாத காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவியை தான்யாவின் பெற்றோர் நாடினர். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு தான்யாவிற்கு சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட, சவீதா மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு நிற்காமல் சிறுமி சவீதாவை மருத்துவமனைக்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்.
முதல்கட்ட அறுவை சிகிச்சையோடு முடிந்த கையோடு தினசரி கண்காணிப்பிலும் தான்யா வைக்கப்பட்டார். இதன்நீட்சியாக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேலதிக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய தான்யாவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார் முதலமைச்சர். தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார்.
சிறுமி தான்யா வாடகை வீட்டில் வசித்து வருவதை அறிந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் பாக்கம் என்ற இடத்தில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான நிலத்திற்கான வீட்டுமனை பட்டாவை வழங்கினார். கூடவே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 2 லட்ச ரூபாய் மதிப்பிலான அனுமதி ஆணையையும் வழங்கி இருந்தார்.
இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!
அன்று அறிவித்ததோடு நின்றுவிடாமல் இன்றைய தினம் தலைமைச் செயலகத்திற்கு சிறுமி தான்யா உள்ளிட்ட குடும்பத்தினரை வரவழைத்து கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியை வழங்கி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சிறுமி தான்யாவின் தாயார் சௌபாக்யம் கண்கலங்கி நின்ற காட்சி காண்போரை நெகிழச் செய்தது. சிறுமி தான்யாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர், தந்தை ஸ்டீபன்ராஜ் தோளைத் தட்டி சிரித்து மகிழ்ந்தார். சொந்த வீட்டில் குடியேறப் போகும் மகிழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பத்தின் முகத்திலும் எதிரொலித்ததை நன்றாகவே பார்க்க முடிந்தது.
ஒரே ஒரு சிறுமியின் உடல்நலம் குறித்த செய்தியாக மட்டுமே இதனை அணுகமுடியாது, இவ்வாறான அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உரிய உதவிக்காக மன்றாடும் பலருக்கும் தான்யாவுக்கு கிடைத்து மறுவாழ்வு ஒரு நம்பிக்கையூட்டும் செய்தி. எப்படியேனும் தாங்களும் அரசின் கவனத்திற்கோ, நல்உள்ளங்களின் கவனத்திற்கோ செல்லும்பட்சத்தில் தாமும் மீண்டு வருவோம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோருக்கு தான்யா தான் நற்செய்தியின் தூதுவர்.
இதையும் படிங்க: அடிப்படை கொள்கை மீறி திமுகவுடன் 8 ஆண்டுகள் கூட்டணி...மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல்...தொண்டர்கள் சரமாரி கேள்வி...