அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, செந்தில் பாலாஜி.. பதவியைப் பதம் பார்த்த வழக்கும் வாய்த் துடுக்கும்.!
நீதிமன்றத்தின் கடுமை காரணமாக அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் கடுமை காரணமாக அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முறைகேட்டிலும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை 2023 ஜூனில் அவரை கைது செய்தது. இலாகா இல்லாத அமைச்சராக நீடித்த செந்தில் பாலாஜி, ஒரு கட்டத்தில் ஜாமின் கிடைப்பதற்கு அமைச்சர் பதவி தடையாக இருப்பதாக உணர்ந்தார். இதனால், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இதன் பின்னர் 471 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால், அவர் சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது. இதற்கு ஏப்.28 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியது. இதனால், இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜி ஒரு முடிவு எடுக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் தன்னுடைய ராஜினாமாவை முதல்வரிடம் செந்தில் பாலாஜி வழங்கினார்.
இதையும் படிங்க: விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது.. ராஜேந்திர பாலாஜி தாறுமாறு கலாய்ப்பு.!
அதேபோல சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த அமைச்சர் பொன்மொழிக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீதும் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனால், திமுக அமைச்சரவையில் பொன்முடிக்கும் நெருக்கடி அதிகரித்தது. இந்நிலையில் பொன்முடியும் முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பொன்முடியும் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதங்களை ஏற்று அமைச்சரவையிலிருந்து அவர்களை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குப் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்று அவர்கள் இருவரும் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கால் செந்தில் பாலாஜியும் வாய்த் துடுக்கால் பொன்முடியும் பதவியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை.. புரட்சிகரமான திட்டம்! துணை முதல்வர் உதயநிதி பேச்சு..!