அமைச்சர் பதவியை விட்டு இன்று விலகும் செந்தில் பாலாஜி.? அடுத்து பொன்முடி.? திமுகவில் அதிரடி மாற்றங்கள்!
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி இன்று விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி இன்று விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த முறைகேட்டிலும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை 2023 ஜூனில் செந்தில் பாலாஜியை கைது செய்தது. 471 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அவர் சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு ஏப்.28 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ளது. இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜி ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த அமைச்சர் பொன்மொழிக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இதனால், திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கும் பொன்முடிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம்..? முக்கிய அமைச்சர்களுக்கு ஆப்பு..! மாறப்போகும் இலாகாக்கள்..!
நீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும தங்களின் பதவி விலகல் கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது ஊட்டியில் உள்ள ஆளுநர் இன்று சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதலில் செந்தில் பாலாஜியின் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டபேரவையில் நேற்று, 'பயோ' மருத்துவ கழிவுகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக அந்த மசோதாவை சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். ஏனெனில் இந்த மசோதா வரும் 29ஆம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படும். அப்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க மாட்டார் என்பதால், அவருக்குப் பதிலாக அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் அமைச்சர் பொன்மொழியின் சர்ச்சை பேச்சால் அவர் மீது கட்சியிலேயே அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் இன்னும் ஓராண்டில் வர உள்ள நிலையில் இந்த விவகாரத்தை இன்னும் பேசிப் பேசி பூதாகரமாக்குவார்கள் என்பதால், பொன்முடி அமைச்சர் பதவியில் நீடிப்பதை கட்சி தலைமையும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதன் பிறகு பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குப் பதிலாக அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் கெடு... மனமில்லாத திமுக..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் செந்தில் பாலாஜி..?