செந்தில் பாலாஜி வழக்கு; அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை... வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!!
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் தலைமறைவாக இருந்தார். இதனால் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்தக் குற்றப்பத்திரிகையின் நகலை வாங்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்தார்.
இதையும் படிங்க: இறுகுகிறது அமலாக்கத்துறை பிடி.. முடிந்தது 2 ஆண்டு தலைமறைவு.. செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்..!
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றி செல்வம் உள்ளிட்ட 11 பேர் நீதிபதி கார்த்திகேயன் முன்பாக ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்? என்று அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை நகலை இன்று ஆஜரான அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மீண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை தேடி வந்ததால், அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மறுபுறம் அவர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பதவி நீக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை..!' உச்சநீதிமன்றத்தையே மிரள வைத்த செந்தில் பாலாஜி