நாட்டின் உயிர்நாடி ரயில்வே துறை வெண்டிலேட்டரில் உள்ளது.. காங்கிரஸ் விமர்சனம்..!
நாட்டின் உயிர்நாடியான ரயில்வே துறை வென்டிலேட்டரில் இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மனித தவறுகள், தொழில்நுட்பக்கோளாறு, நாசவேலை போன்ற காரணங்களால் ரயில்வே விபத்துகள் நடக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஜம்தாரா ரயில் விபத்து, ஹௌரா-மும்பை பயணிகள் விரைவு ரயில் விபத்து, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்து, மைசூரு - தார்பங்கா பாகமதி விரைவு ரயில் விபத்து என பல ரயில் விபத்துக்கள் நேர்ந்துள்ளன மத்திய அரசின் அலட்சியப் போக்கால் தான் தொடர்ந்து பல ரயில் விபத்துக்கள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், வந்தே பாரத் ரயிலைக் காட்டி ரயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது என கூறினார். ரயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது என்றும் இந்தப் பணியை மத்திய அரசு தான் செய்துள்ளது எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை.. மாநிலங்களவையில் வலியுறுத்தல்..!
ரயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளதாகவும் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை மத்திய அரசு படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு வெற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் வரும் நாட்களில் ரயில்வேயும் நண்பர்களின் கைகளுக்கு செல்லுமா? அப்படி ஏதாவது சதி இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை விமர்சித்த அவர், விபத்து நடக்கும் போது அமைதியாக இருப்பதாகவும், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மகா கும்பமேளாவிற்கு செல்ல கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ரயில் நிலையத்தில் அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: இந்தியாவை ‘இந்து பாகிஸ்தான்’ ஆக பாஜக மாற்றுகிறது.. சஞ்சய் ராவட் காட்டமான விளாசல்..!