ராகுல்காந்தி விஜய்க்கு கொடுத்த கிரீன் சிக்னல்...மகிழ்ச்சியில் காங்கிரஸ்...செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணி இதுதானா?
தவெகவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்ததால் ஆளும்கட்சியான திமுக கடும் கோபத்தில் உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் ராகுல் காந்தி பேசினாரா? கொடுக்கப்பட்ட கிரீன் சிக்னல் என்ன செல்வபெருந்தகை பேச்சின் பின்னணி இதுதானா?
திமுக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு 2012 க்குப்பின் வெளியேறிய காங்கிரஸ் அதற்கு பின் 2016-ல் மீண்டும் இணைந்தது. அதன் பின்னர் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளும் தோல்விக்குப்பின் 2018-ல் திமுக கூட்டணியில் இணைந்தன. கூட்டணியில் இணைந்ததிலிருந்து 2024 மக்களவை தேர்தல்வரை மூன்று தேர்தல்களையும், உள்ளாட்சி தேர்தலையும் இக்கூட்டணி சந்தித்து வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் கூட்டணிக்குள் கட்சிகளை நடத்தும் விதத்தில் திமுகவின் பெரியண்ணன் மனோபாவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 6 ஆண்டுகளாக உள்ளதாக கூட்டணிக்கட்சிக்குள் முணுமுணுப்புகள் உள்ளது. கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது முதல், சீட்டுகளை குறைத்து முடக்குவது வரை தன்னை ஆட்சியில் அமரவைக்க உழைத்த கூட்டணிக்கட்சிகளுக்கு திமுக கொடுத்த பரிசாகும்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும்...
திமுக ஆட்சி நடந்தாலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதோ ஆட்சியில் பங்கு கொண்டதுபோல் ஆளுங்கட்சியின் தவறுகள், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து வந்தன. இது அந்தந்த கட்சிகளுக்குள் இருக்கும் நியாயமான கட்சிக்காரர்களுக்கு கோபத்தை தூண்டியது. விசிக தொடங்கி மார்க்சிஸ்ட் கட்சி வரை திமுகவுடன் பல இடங்களில் முரண்பட்டன. ஆனாலும் கூட்டணிக்குள் வாய்ப்பேச முடியாமல் இருந்தன காரணம் மாற்று வழி இல்லாமல் இருந்ததுதான்.
இந்நிலையில் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் அனைத்து சூழ்நிலைகளும் மாறி வருகிறது. தவெகவை விஜய் தொடங்கி கூட்டணி, ஆட்சியில் பங்கு என அறிவித்ததும், அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்ததும் திமுக தோழமை கட்சிகளுக்கு மாற்று வழிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தவெகவை இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக தலைமை தாங்கும் இடத்தில் திமுக உள்ள நிலையில் தன்னிச்சையாக திமுகவை கடுமையாக எதிர்க்கும் தவெகவை கூட்டணிக்குள் அழைக்கும் தைரியம் செல்வப்பெருந்தகைக்கு எப்படி வந்தது என்பதுதான் இப்போதுள்ள டாக்.
கூட்டணிக்குள் தவெகவை அழைத்தால் அதை திமுக தலைவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? தவெக திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்ல திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் இதை எப்படி வேடிக்கை பார்ப்பார்கள் என்று இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தது.
செல்வப்பெருந்தகை மாநில தலைவராக இருந்தாலும் கூட்டணியில் எனக்கென்ன என்று எதையும் பேசிவிட முடியாது. அவருக்கு டெல்லி மேலிடத்திலிருந்து சிக்னல் கிடைக்காமல் பேச முடியாது, ஆகவே அவருக்கு கிரீன் சிக்னல் கிடைத்தே விஜய்யை கூட்டணிக்கு அழைத்துள்ளார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தவெக தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் விசாரித்தபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் டெல்லியிலிருந்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான நபர் ஒருவர் மூலம் விஜய்க்கு நெருக்கமான ஒரு முக்கிய நபர் டெல்லியில் ராகுலை சந்தித்துள்ளாராம். இந்த தகவலை புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமிக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொண்டாராம் விஜய்.
சந்திப்பின்போது பல தகவல்கள் ராகுலுக்கு சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராகுலை விஜய் சந்தித்தபோது கட்சி தொடங்கினால் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம், தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வேண்டும் என ராகுல் வாக்களித்திருந்த நிலையில் தற்போதுள்ள அரசியல் சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது. அப்போது அந்த நபரின் செல்போனிலிருந்து ஃபேஸ் டைம் மூலம் விஜய்யிடம் ராகுல் பேசியதாகவும் அப்போது மேலும் பல விஷயங்கள் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உளவுத்துறை கூட ஸ்மெல் பண்ண முடியாத அளவுக்கு நடந்துள்ளது.
அதன் பின்னரே செல்வபெருந்தகைக்கு இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைமை மூலம் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கலாம் அதன் அடிப்படையிலேயே செல்வபெருந்தகை துணிச்சலாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் விஜய்க்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் மாற்றங்களை பொறுத்திருந்து பாருங்கள் என்கின்றனர் காங்கிரஸ் தரப்பினர்.
இதையும் படிங்க: சட்டசபையில் புயலை கிளப்பிய அண்ணா பல்கலைக்கழக விவகாரம்... மடைமாற்றிய தோழமைக் கட்சி எம்எல்ஏக்கள்...குறுக்குசால் ஓட்டிய செல்வபெருந்தகை