ஆட்சி அதிகாரம்... கொள்கைக் கூட்டாளிகளான திமுக- அதிமுக..! டெல்லியில் இனிப்பு... தமிழகத்தில் மட்டும் கசப்பா..?
மாநிலத்தில் கூட்டணி அரசு அமைப்பதை தவிர்த்து வரும் இரு கட்சிகளும் இரு கட்சிகளும் மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ளன.
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக வலுவான கூட்டணியை தக்க வைத்து இப்போதே தேர்தலுக்கு தயாராகி விட்டது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு என அமித் ஷா கூறியதாகவும் ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பங்கு கிடையாது தனித்தே ஆட்சி அமைப்போம் எனக் கூறி வருகிறார். இது கூட்டணி அமைத்த சில நாட்களிலேயே இரு கட்சிகளுக்கும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏன் தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்கிற கேள்வி இப்போது மீண்டும் ஓங்கி எழுந்துள்ளது. மாநிலத்தில் கூட்டணி அரசு அமைப்பதை தவிர்த்து வரும் இரு கட்சிகளும் இரு கட்சிகளும் மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ளன. தமிழ்நாட்டில் ஒரு கட்சி அரசையே விரும்புகின்றன. சில நாட்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது, அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை அறிவித்தார். அதிமுக தலைமையில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்றும் கூறினார். இப்போது அதிமுக இந்தக் கூட்டணி தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டுமே என்றும் கூட்டணி அரசை அமைப்பதற்கு அல்ல என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு... கட்சியை விட்டு விலகிய அதிமுக பிரமுகர்!!
இன்றுவரை திமுகவோ, அதிமுகவோ தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில், 1967 முதல் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற பாரம்பரியம் அப்படியே இருந்து வருகிறது. 1979 முதல் திமுகவும், அதிமுகவும் மத்திய ஆட்சியில் கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ளன. 1979 ஆம் ஆண்டு, சரண் சிங் அரசின் இரண்டு அதிமுக எம்.பி.க்கள் சேர்க்கப்பட்டனர். கிட்டத்தட்ட 10 ண்டுகளுக்குப் பிறகு, திமுகவின் முரசொலி மாறன் மத்திய அரசின் துணைத் தலைவராக இருந்தார். சரண் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் பதவி வகித்தார்.
இந்த கூட்டணி சகாப்தம் 1996-ல் தொடங்கியது. அதன் பின்னர் குறிப்பாக திமுக நீண்ட காலமாக மத்திய ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று வந்தது. 1998-99ல் வாஜ்பாய் அரசில் அதிமுகவும் ஒரு பகுதியாக இருந்தது. வாஜ்பாய் அரசிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 வரை மத்திய அமைச்சரவையில் திமுகவினர் சேர்க்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணியைப் பொறுத்தவரை, இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அரசாங்கத்தை விரும்பவில்லை.
இதுகுறித்து அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான ஆர்.கே ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழ்நாட்டில், அது திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி. இரண்டுமே அரசை அமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக இடங்களில் எப்போதும் போட்டியிட்டு வருகிறது. எப்போதும் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று வருகிறது. எனவே அதிகாரப் பகிர்வு, கூட்டணி ஆட்சிக்கான தேவை ஏற்படவில்லை.
வரும் தேர்தல்களிலும் இதே நிலைதான் இருக்கும் என்று தெரிகிறது. மத்திய அரசில் கூட, தேவையான எண்ணிக்கையைப் பெறாதபோது காங்கிரஸ் கூட்டணி பற்றிப் பேசியது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பகிர்வுக்கான தேவை ஒருமுறைதான் எழுந்தது. 2006ல். அப்போது திமுகவால் ஆட்சியை அமைக்கப் பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. ஆனால் அப்போதும் கூட அரசு அதே வழியில் இயங்கியது. காங்கிரசுக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ அதிகாரத்தில் பங்கு அளிக்கவில்லை.
தமிழ்நாட்டில், ஒரு கட்சியின் அரசு மாநிலத்திற்கு சிறப்பாகச் செயல்பட்டதால், கூட்டணி என்ற பரிசோதனை இங்கு செய்யப்படவில்லை'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.
இதையும் படிங்க: கூட்டணி.. ஆட்சி.. சர்ச்சை! அனுமதியின்றி பேட்டிக் கொடுக்காதீங்க.. அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!