அடுத்த ஆப்பு.? தமிழக ஆளுநருக்கு எதிரான உத்தரவு கேரள ஆளுநருக்கு பொருந்துமா.? உச்ச நீதிமன்றம் விசாரணை!
தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற உத்தரவு, கேரள அரசின் வழக்குக்கும் பொருந்தும் என உத்தரவிடக் கோரி கேரள அரசு சார்பில் மனு தாக்கல்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த நிலையில், கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கும் அது பொருந்துமா என விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்ட விவகாரத்தில், அவர் காலதாமதம் செய்வதாக அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீதும் முடிவு எடுக்கக் குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது.
இதற்கிடையே, தற்போது பீஹார் ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் கேரள ஆளுநராக இருந்தபோது, மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் காலதாமதம் செய்தது தொடர்பாக, கேரள அரசும் 2023இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கேரள ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அப்போதே கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற உத்தரவு, கேரள அரசின் வழக்குக்கும் பொருந்தும் என உத்தரவிடக் கோரி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம் எப்போதுதான் செயல்படுத்தப்படும்.? விலாவரியாக விளக்கிய தங்கம் தென்னரசு.!!
இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜாய்மால்யா பகிச்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கேரள அரசு தொடர்ந்த வழக்கின் சாராம்சம், தமிழக அரசின் வழக்கில் இருந்து வேறுபட்டது' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியும் கேரள ஆளுநர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வாதிட்டனர். இதையடுத்து, தமிழக அரசு வழக்கின் உத்தரவு, கேரள வழக்குக்கும் பொருந்துமா என்பது குறித்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, மே 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்.. பாராட்டி தள்ளிய உ.பி. மாஜி முதல்வர் அகிலேஷ்!!