போப் ஆண்டவர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ், தொடக்க காலத்தில் இரவு விடுதியில் பவுன்சராக தனது வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2013-ல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போப் பிரான்சிஸ், 2013-ல் இருந்து 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வழி நடத்தினார். சிறுவயதிலேயே போப் பிரான்சிஸுக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. மேலும் இவர் தனக்கான உணவை தானே தயாரித்து உண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு மற்றும் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. பிப்ரவரி 23ம் தேதி போப் பிரான்சிஸ்க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதனால், அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 5 வாரங்களாக சிகிச்சையில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் சற்று உடல்நலம் தேறினார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் இருந்து வந்த அவர் மருத்துவமனையின் பால்கனியில் இருந்து, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரை பார்க்க கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி புன்னகையையும் வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் சற்று உடல் தேறிய நிலையில், மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் எனக் கூறப்பட்டது. வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த போப் பிரான்சிஸ், ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று வாடிகன் நகருக்கு வந்தார். அங்கு வாடிகன் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களை பார்த்து மகிழ்ச்சியில் கையசைத்ததுடன், அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்து, அங்கிருந்தவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் இன்று காலமானார். வாடிகனில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் போப் ஆண்டவரின் விருப்பப்படி, வாடிகனில் உள்ள புனித மேரி ஆலயத்தில் அவரது உடல் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: விவா ஐல் பாபா..! போப் பிரான்சிஸ் தோன்றி மக்களை ஆசீர்வதித்தார்..!
இதையும் படிங்க: அதிமுகவுக்கு தகுதி இருக்கா? - கர்ஜித்த முதலைச்சர்... கப்சீப் ஆன எடப்பாடி... பேரவையில் காரசார விவாதம்!