தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் ஓய்வுக்குப் பிறகு பல மாற்றங்கள் நடந்தது. அதில் முக்கிய மாற்றம் தலைவி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த அதிமுகவுக்குள் குழப்பம் விளைவிக்க பாஜக எடுத்த நடவடிக்கை ஆகும். அதிமுகவை ஜெயலலிதா இருக்கும் வரை நெருங்க முடியாத பாஜக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் இருந்த குழப்பத்தை பயன்படுத்தி தன் கையில் எடுக்க முடிவு செய்தது.

அதற்கு பெரும் தடையாக இருந்தவர் சசிகலா. அவர் ஜெயலலிதாவிடம் நெருங்கி பழகி அந்த அரசியலைக் கற்றவர் என்பதால் சசிகலாவை அழகாக நகர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கி, ஓபிஎஸ்ஐ உள்ளே திணித்து நான்கு ஆண்டு ஆட்சியை தொடர்வதற்காக அதிமுகவுக்குள் பல்வேறு வேலைகளை பாஜக தலைமை செய்தது. இது அனைவருக்கும் தெரிந்தே நடந்தது. தங்கள் ஆட்சி நான்கு ஆண்டு காலம் நீடிக்க வேண்டுமென்றால் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டுதான் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு எடுத்தது.
இதையும் படிங்க: என்ன ஆச்சு கோவை சத்தியனுக்கு? கண்டிக்கப்பட்டதால் எடுத்த முடிவா?

அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்று அதன் பின்னர் அவர்கள் புரிந்து கொள்வதற்குள் பல விஷயங்கள் கடந்து சென்று விட்டது. குறிப்பாக பாஜகவுடன் கூட்டு வைத்ததால் பாஜக பெரியண்ணன் மனோபாவத்தில் அதிமுகவை நடத்த ஆரம்பித்தது. இந்த நோய் மாநிலத் தலைவராக ஓராண்டே அனுபவம் பெற்று கட்சிக்கு தலைமை ஏற்க வந்த அண்ணாமலையையும் தொற்றிக் கொண்டது. இந்த விவகாரத்தில் உள்ளே புகுந்த திமுக வெகு அழகாக இதை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவுக்கு எதிராக காய் நகர்த்தியது.
திமுக தலைமை இதை தெளிவாக பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக உள்ள சூழ்நிலையை அதிமுகவுக்கு எதிராக திருப்பி அதிமுக, பாஜகவின் திட்டங்களை ஆதரிக்கிறது என சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை கொண்டு சென்று சென்றது. இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் அதிமுக-பாஜக உறவு முறியும் நிலையில் அண்ணாமலை போன்றோர் அதை வேகப்படுத்தினர். ஈரோடு இடைத்தேர்தலில் இந்த முடிவு பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது. காரணம் அதிமுகவில் உள்ள உள்குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை நிம்மதி இல்லாமல் செய்து ஒரு தெளிவற்ற நிலையில் வைத்திருந்தது பாஜக தலைமை.
இதனால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையில் அதிமுக, ஒன்றுமில்லாத கட்சி, அதிமுக தலைமை ஒன்றுக்கும் உதவாதது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். இந்த நிலையில் தான் அதிமுக பாஜக உறவு முறித்தது. 2024 மக்களவை தேர்தலில் இதை பயன்படுத்தி பாஜகதான் இரண்டாவது பெரிய கட்சி என்கின்ற போலி பிம்பத்தை உளவு துறை மூலம், ஊடகங்கள் மூலம் ஆளுகின்ற தரப்பு உருவாக்கியது. இதன் விளைவு திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிளவு பட்டது. இதில் திமுக கூட்டணி பெரும் ஆதாயமடைந்தது, ஆனாலும் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பு இல்லாத வகையில் 21% வாக்குகளை பெற்று இருந்தது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து அதிமுகவை பாஜகவுடன் கள்ள உறவு, பாஜக உடன் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து விடும் என்கிற பிரச்சாரம் வைக்கப்படுகிறது. அதில் ஒரு வகை தான் அதிமுக பாஜகவால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் என்.டி.ஏ கூட்டணி அமையும் என்கின்ற தோற்றத்தை உருவாக்க பல்வேறு நரேட்டிவ்கள் செட் செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் அதிமுக சசிகலா கைக்கு சென்று விடும், ஓபிஎஸ் கைக்கு சென்று விடும், இரட்டை இலை முடக்கப்படும் அல்லது இரட்டை இலையை முடக்குவோம் என்று கூறி அதிமுக தலைமையை நெருக்கி கொண்டு வந்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள் போன்ற நரேட்டிவ்கள் ஆதரவு ஊடகங்களால், ஆதரவு பத்திரிகையாளர்களால் பெரிய அளவில் பரப்பப்பட்டது.

இதன் பின்னணி அதிமுகவுடன் திமுகவுடன் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை எதுவும் நடத்தக்கூடாது, அதிமுகவுடன் கூட்டணிக்கு திமுக தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் செல்லக்கூடாது, அதிமுக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதே. இது ஓரளவுக்கு கைகூடி வந்தாலும் அதிமுக தலைவர்கள் இந்த பிரச்சாரத்தை அவ்வப்போது முறியடித்துக் கொண்டே வருகிறார்கள். ஆனாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்வி மீண்டும் மீண்டும் அவர்களிடம் வைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அவர்கள் தீக்குளித்து தங்களது தூய தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
இந்நிலையில் தான் அதிமுக, தவெக, காங்கிரஸ் கூட்டணி அமையும் என்கின்ற ஒரு சூழல் உருவாகி வருவதை காண முடிகின்றது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது செய்தியாக வெளியானது. இந்த பின்னணியில் அதிமுகவை ரெய்டு மூலம் மிரட்டி வழிக்கு கொண்டு வந்து என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பார்கள் என்ற நரேட்டிவ் மீண்டும் பரப்பப்பட்டது. இதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் கேள்வி வைத்த போது, ”அப்படி எல்லாம் அவசியம் இல்லை அண்ணன் எடப்பாடியிடம் நாங்கள் நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும், ரெய்டு நடத்தித்தான் கூட்டணிக்குள் கொண்டுவர்வேண்டிய அவசியம் இல்லை என பேசியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு வந்தவர். நெல்லையில் தனி செல்வாக்குடன் இருந்து வருகிறார். அண்ணாமலை தலைமை விமர்சிக்கப்பட்ட நிலையில் பழைய தலைவர்கள் தமிழகத்துக்கு ஏற்ற அரசியல் செய்யாதவர்களாக உள்ள நிலையில் நயினார் நாகேந்திரனை அடுத்த தலைவராக்கலாம் என்கிற பேச்சும் பாஜகவுக்குள் உள்ளது. ஒருவேளை அதிமுக கூட்டணி அமையுமானால் இதற்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர். இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து அண்ணாமலை போன்றோருக்கு பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது.

பாஜகவில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர் அதை முறையாக பேசி நட்பான முறையில் கூட்டணியாக அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் ஆனால் அண்ணாமலை போன்றோர் தங்களுடைய தனிப்பட்ட நலனுக்காக பாஜக கூட்டணிக்குள் அதிமுக வரக்கூடாது என்று செயல்படுவதை குருமூர்த்தி போன்றவர்களே துக்ளக் ஆண்டு விழாவில் சுட்டிக்காட்டியதை காணலாம். அதுவே அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளை ஆரம்பித்தால் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பதும் பாஜகவுக்குள் ஒரு பேச்சாக உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக பரப்பப்படும் செய்திகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பரவலாக ஆங்காங்கே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்ணாமலை போன்றோர் இதற்கு எதிராக இருந்தாலும் பாஜகவுக்குள் பெரும்பாலானோர் அதிமுகவை ஒரு நல்ல நண்பனாக, கட்சி கூட்டணிக்குள் கொண்டு வந்து தேர்தலை சந்திக்கலாம் அது பாஜகவிற்கு பயன் தரும் என்று நினைக்கின்றனர். ஆனால் அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவை தனித்து நிற்க வைத்து தங்களுடைய பலத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் சட்டமன்றத் தேர்தல் என்று வரும்பொழுது இரண்டு பெரிய கட்சிகள் மோதும் பொழுது, பாஜக பெரிய அளவில் இங்கு தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது 4 எம்.எல்.ஏக்கள் கூட கிடைக்காது என்பது எதார்த்தமாக உள்ளது. ஆனாலும் அண்ணாமலை தொடர்ந்து முயற்சிப்பார் இதற்கு எதிராகத்தான் நைனார் நாகேந்திரன், ரெய்டு வேலை எல்லாம் வேண்டாம், சாதாரணமாக அண்ணன் பழனிசாமி உடன் பேசினாலே கூட்டணி அமையும் என்று அண்ணாமலைக்கு எதிராக இந்த கருத்தை வைத்துள்ளதாகவே கருத வேண்டி உள்ளது.
இதையும் படிங்க: 2021-ல் திட்டமிடாமல் கோட்டைவிட்டாரா?... டிடிவியை இணைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தகுதியில்லாத தலைவரா எடப்பாடி பழனிசாமி? ...