23 வயதான ஆந்திராவைச் சேர்ந்த அந்த மென்பொருள் பொறியாளர் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று மும்பை திரும்பிய போது எதிர்பாராத இந்த கொடூர சம்பவம் நடந்தது. மும்பை விசாரணை நீதிமன்றம், அடுத்து மும்பை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் குற்றவாளி சந்திரபான் சுதன் சனாப் என்பவருக்கு உறுதி செய்யப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. "போதிய ஆதாரம் இல்லாதது, நம்பகத்தன்மை அற்ற மிகைப் படுத்தப்பட்ட நீதித்துறை ஒப்புதல் வாக்குமூலம், பிரச்சினைக்குரிய சாட்சியை அடையாளம் காண்பது ஆகியவையே விடுதலைக்கான முக்கிய காரணம்" என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த பெண் எஸ்தர் அனுஹ்யா (23). மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி மும்பை கன்ஜூர் மார்க் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிந்தது. இவர் கடைசியாக மும்பை லோக்மான்ய திலக் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. அவருடன் ஒரு நபரும் சென்றார்.இதை வைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி, சுந்திரபான் சுதம் சனாப் என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து எஸ்தரின் அடையாள அட்டை உட்பட எஸ்தரின் உடமைகளை போலீஸார் மீட்டனர். பாலியல் வன்கொடுமை கொலை குற்றத்தை சனாப் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் குற்றவாளி சனாப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பி. ஆர். கவாய், பிரசாந்த் கே. மிஸ்ரா, கே.கே. விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 113 பக்கங்களை கொண்ட இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

நீதிபதிகளில் ஒருவரான கே.கே. விஸ்வநாதன், "நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் இந்த வழக்கு நிரூபிக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த தீர்ப்பில், "23 வயது பெண் மும்பையில் பணிபுரிந்து அந்தேரியில் உள்ள பெண்களுக்கான ஒய் டபிள்யூ சி ஏ விடுதியில் தங்கி இருந்தார். டிசம்பரில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் தனது பெற்றோரை பார்க்க வந்த அவர், 2014 ஜனவரி 4ஆம் தேதி அன்று விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்திருக்கிறார். அதன் பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியாததால், அவருடைய தந்தை மும்பை சென்று, அவர் காணாமல் போனது பற்றி புகார் செய்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில், ஜனவரி 16ஆம் தேதி அன்று கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அருகே உள்ள சில புதர்களின் நடுவே கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முஸ்லிம் ஆண்கள் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் எத்தனை எப்ஐஆர் பதிவு: மத்திய அரசிடம் அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்
விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்த முழு சாட்சியங்களையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து மறு மதிப்பீடு செய்து நாங்கள் மேல்முறையீட்டு மனுவை அனுமதித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, மேல் முறையீட்டாளர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அவரை விடுகிறோம்" என்று, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் "இந்த வழக்கில் அந்தேரிக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்து அந்த பெண்ணை மும்பை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற பிறகு குற்றத்தை செய்ததாக சனாப்பின் தரப்பில் கூறப்படும் நீதிக்கு புறம்பான வாக்குமூலத்தின் உண்மை தன்மையை சந்தேகித்த" உச்ச நீதிமன்ற அமர்வு, "பொருள் விவரங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே நாங்கள் கூடுதல் நீதித்துறை ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிக்க முடிவு செய்தோம்" என்றும், குறிப்பிட்டுள்ளனர். மேலும் "குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 'பைக்'கை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைப்பதற்கான ஆதாரங்களை" உச்ச நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. குற்றவாளியை அடையாளம் காண்பதற்கான நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம் ஊடகங்கள் முழுவதும் பரவியதால் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்ட சோதனை அடையாள அணிவகுப்பிலிருந்து வெளிவந்த ஆதாரங்களையும் நிராகரித்துவிட்டது" உச்ச நீதிமன்றம்.
அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் சகோதரிகளிடம் இருந்து இறந்த பெண்ணின் சூட்கேஸை மீட்டு எடுத்ததாக கூறப்படும் வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர். "வெறும் மீட்டெடுப்பின் அடிப்படையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு எதிராக குற்றத்திற்கான தண்டனையை உறுதிப்படுத்த முடியாது. இறந்த பெண்ணின் கல்லூரி அடையாள அட்டையை பாதுகாப்பாக வைத்து இருக்காததும் புதிராக உள்ளது. இந்த உண்மைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இந்த வழக்கில் ஓட்டைகள் நிறைந்துள்ளன என்று முடிவு செய்ய நம்மை கட்டுப்படுத்துகிறது". சாட்சிகள் பொய் சொல்லலாம்; சூழ்நிலைகள் சரியாக இருக்கலாம்; இருப்பினும் இந்த நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட சூழ்நிலைகள் முழுமையாக நிறுவப்பட வேண்டும். 'இருக்கலாம்' என்று குறிப்பிடுவதற்கு ஒரு சட்ட வேறுபாடு உள்ளது என்பதை இந்த நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டது" என்னும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அதிருப்தியும் ஆவேசமும் அடையச் செய்துள்ளது. இது குறித்து எஸ்தரின் தந்தையும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான ஜொனாதன் பிரசாத் கூறியதாவது கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற சம்பவம். முன்பு எங்களுக்கு நீதி கிடைத்ததை பாராட்டினோம். தற்போது எல்லாம் மாறிவிட்டது. இந்த வழக்கில் நேரடி சாட்சி இல்லை. போலீஸார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து சரியான நபரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து எனது மகளின் உடமைகளை மீட்டனர். குற்றவாளியும் போலீஸார் மற்றும், மாஜிஸ்திரேட்டிடமும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆதாரங்கள் எல்லாம் விசாரணை நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் போதுமானதாக இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் என்ன நடைபெற்றது என தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என நினைத்தோம். ஆனால், குற்றவாளி விடுவிக்கப்படுவார் என கனவிலும் நினைக்கவில்லை. விடுவிக்கப்பட்டவர் அப்பாவி என்றால், எனது மகளை கொன்ற குற்றவாளி யார்?
எனது ஒட்டுமொத்த குடும்பமும் நம்பிக்கையிழந்து விட்டது. நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட போராட்டம் வீணாகிவிட்டது. நான் சோர்வடைந்து விட்டேன். எனக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், இனிமேலும் போராட வலிமை இல்லை. இந்த தீர்ப்பு எனக்கு தண்டனை போல் உள்ளது. இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆண்டவனிடம் விட்டு விடுகிறேன்". என்று ஜொனாதன் பிரசாத் தாங்க முடியாத வேதனையுடன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: கைது நோட்டீசை அனுப்புவதற்கு 'வாட்ஸ்அப்' பயன்படுத்தக்கூடாது; காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு