காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கார்கி ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பாடல் இரு சமூகத்துக்கு இடையே வன்முறையை ஏற்படுத்துவதாகக் கூறியும் 2024 ஜனவரி 3ம் தேதி குஜராத்தில் ஜாம்நகர் போலீஸார் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இந்த பாடல் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக போலீஸார் குற்றம்சாட்டினர்.

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி இம்ரான் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், எப்ஐஆர்யை ரத்து செய்ய உத்தரவிடமுடியாது என்று உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, இம்ரான தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை.. பதிவு செய்தது டெல்லி போலீஸ்..!
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபெய் எஸ் ஓகா, நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இம்ரான் பிரதாப்கார்கி பாடலில் எந்த வன்மும் இல்லை. முதலில் போலீஸார், என்ன எழுதப்பட்டுள்ளது, பேசப்பட்டுள்ளது என்பதன் அர்த்தத்தை எப்ஐஆர் பதிவு செய்யும் முன் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் சில கட்டுப்பாடுகளுடன் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளும் காரணத்தோடுதான் இருக்க வேண்டுமே தவிர, மக்களி்ன் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது.
ஒரு நியாயமான நபரின் பார்வையில் இருந்து எழுதப்பட்ட அல்லது பேசும் கருத்துகளை மதிப்பிடப்பட வேண்டும், விமர்சனத்தை தங்கள் அதிகாரத்திற்கும் அந்தஸ்துக்கும் அச்சுறுத்தலாகக் கருதுபவர்களின் பார்வையில் பார்க்கக்கூடாது .
கலை, இலக்கியம்,பாடல், நாடகம், இசை, கிண்டல் ஆகியவை மனித வாழ்க்கைக்கு அர்த்தத்தை வழங்குபவை. இந்த ஊடகங்கள் வழியாக மக்கள் தங்கள் சபேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தைப் பெறுகிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டம் வந்து 75 ஆண்டுகள் ஆனபின்பும், கருத்து, பேச்சு சுதந்திரத்தை போலீஸார் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர் பேசியதில், எழுத்தில் எந்தவிதமான வன்முறையும் இல்லை, தேசவிரோதமும் இல்லை. உண்மையில் அவரின் கவிதை வன்முறைக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும், அன்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியை வலிறுத்தி கவிதை எழுதப்பட்டுள்ளது, எந்த மதத்துக்கும் எதிராக கவிதை இல்லை.
ஆதலால் குஜராத் போலீஸார் இம்ரான் பிரதாப்கார்கி மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம்” என தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது’.. உச்ச நீதிமன்றம் கண்டிப்பு..!