விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக கோயில் பூட்டப்பட்டது. கோயிலை திறக்க வேண்டுமென இரு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இடைக்கால உத்தரவாக கோயிலில் ஒரு கால பூஜை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டு ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் திறக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் பட்டியல் சமூக மக்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வேலூர் கிராமத்தில் வெடிக்கும் வக்பு சொத்து சர்ச்சை.. கொதிக்கும் மக்கள்.. விசாரிக்கும் அரசு.. பாஜகவின் வார்னிங்!
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 19 மற்றும் 21ஆம் தேதிகளில் விழுப்புரம் கோட்டாசியர் தலைமையில் இரு தரப்பினரும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோயிலை சுத்தம் செய்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பின்னர் பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வது தொடர்பாக தேதி அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று திரௌபதி அம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு உள்ளே எட்டு கேமராக்கள், வெளியே இரு கேமராக்கள் என மொத்தம் பத்து கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 5.40 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு 6 மணிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 6 15 மணி முதல் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபடலாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பட்டியல் இன மக்கள் 7 மணி அளவில் 60க்கும் மேற்பட்டோர் கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. வன்னியர் தரப்பில் ஒரு சில பெண்கள் மற்றும் சிறுவர்கள் வழிபட்டனர். எங்களுக்கு நாளை தான் வெள்ளிக்கிழமை உகந்த நாள் நாளை வழிபடுவோம் என்று வன்னிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டியல் இன மக்கள் வழிபாட்டிற்கு வந்தபோது வன்னிய மக்களைச் சேர்ந்த சில பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். போலீசார் எஸ்பி சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் தொடர்ந்து பாதுகாத்து அளித்தனர்.

கோவில் காலை 7.45 மணிக்கு மூடப்பட்டது. இனி தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு காலை.7.30 மணிக்கு மூடப்படும் என தெரிவித்துள்ளனர். தினமும் இருதரப்பும் வழிபடலாம் என போலிசார் தெரிவித்தனர். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படும் திரெளபதி அம்மன் கோயிலில், இன்று காலை முதல் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களை தூண்டி ரத்த ஆறு ஓடும் மேற்கு வங்கம்... பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டாரா மம்தா..?