மத்தியப்பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யார் அந்த ஆசிரியர் என அனைவரும் தேட துவங்கினர். இந்த வீடியோ குறித்து அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திலிப் குமார், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வீடியோ பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து வீடியோவில் மாணவர்களுக்கு மது வழங்கும் ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் பகேல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் பகேல், கீராணி என்ற பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

இதுமட்டும் அல்ல, ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் பகேல் மதுபானம் குடித்த நிலையிலேய தினமும் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு பாடம் சொல்ல வேண்டிய நேரத்தில் மது போதையில் மிதப்பதாகவும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் மாணவர்கள் முன்னிலையில் மது குடித்தது மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கும் மது கொடுத்த இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில் ஆசிரியர் மாணவர்களுக்கு குடிப்பதற்கான மது வகைகளை வழங்குவது தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாக, தவறான நடத்தை, குழந்தைகளை மது குடிக்க ஊக்குவித்தல், ஆசிரியர்களின் கண்ணியத்துக்கு எதிராக நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், மத்திய பிரதேச குடிமைப் பணி (நடத்தைகள்) விதிகளின் கீழ் ஆசிரியர் நவீன் பிரதாப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் திலீப் யாதவ் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் பகேலை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை புறக்கணித்தது குறித்து கல்வித் துறையிலும் கண்டனம் கிளம்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், அறை ஒன்றில் அமர்ந்திருக்கும் ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் பகேல், சிறுவர்களுக்கு மதுபானம் வழங்குவது பதிவாகியுள்ளது. மேலும் அதனைக் குடிப்பதற்கு முன்பு தண்ணீர் கலக்க வேண்டும் என்று ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் பகேல் செல்வதும் தெளிவாக கேட்க முடிகிறது.
மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளை போதிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, மாணவர்கள் முன்னிலையில் மது குடிப்பதும், மாணவர்களுக்கும் அந்த மதுவை பழக்குவது போன்ற வீடியோ மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் ஆறுதலை அளித்துள்ளது.
இதையும் படிங்க: மோடியின் உற்சாக சந்திப்பு தோற்றுப்போனது..! வங்கதேச விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த கார்கே..!