புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ளது, மண்டையூர். இந்த ஊரில் உள்ள சோதிராயன்காட்டை சேர்ந்தவர் சித்திரகுமார் - ஜீவிதா தம்பதி.இவர்களுடைய மகன் மணிகண்டன் (18 வயது). மகள் பவித்ரா (16 வயது). மணிகண்டன் ஐ.டி.ஐ. படித்து விட்டு, எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். பவித்ரா மண்டையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
பவித்ரா எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பார். இதனால், அவரை வீட்டில் பெற்றோர் அவ்வப்போது கண்டிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு படுக்கைக்கு சென்ற பவித்ரா இரவு 11 மணியைத் தாண்டி மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய சகோதரர் மணிகண்டன் கண்டித்துள்ளார். அப்போதும் செல்போனை பவித்ரா பார்த்துக்கொண்டிருந்ததால், தங்கையிடம் இருந்த போனை பறித்து, துாங்க செல்லுமாறு மணிகண்டன் அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், போனை திருப்பிக் கேட்டு அந்த இரவிலும் அண்ணனுடன் சண்டை போட்டுள்ளார் பவித்ரா. இதனால் கோபமடைந்த மணிகண்டன் செல்போனை தூக்கி தரையில் வீசி உடைத்துள்ளார். இதனால் மனமுடைந்த பவித்ரா, ஓடிச் சென்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக மணிகண்டனும் கிணற்றில் குதித்தார். இது தொடர்பாக நவல்பட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி, உயிரிழந்த நிலையில் பவித்ராவையும் மணிகண்டனையும் மீட்டனர். இது தொடர்பாக மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்போன் பிரச்சினையால் அண்ணனும் தங்கையும் உயிரிழந்திருப்பது மண்டையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 23 வயது பெண் மீது 19 வயது பையனுக்கு வந்த காதல்... 'இன்ஸ்டா' பழக்கத்தால் கடைசியில் நேர்ந்த துயரம்