×
 

தமிழகம் பெரிய பாதிப்பை சந்திக்கும்... திமுக அரசை எச்சரித்த இன்போசிஸ் முன்னாள் அதிகாரி..!

தமிழ்நாடு பெரிய பாதிப்பை சந்திக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழி வார்த்தைகளை கருப்பு பூச்சு கொண்டு அழிப்பது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி தமிழக அரசை எச்சரித்துள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரின் பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தும் மும்மொழிக் கொள்கையை மத்திய பாஜக அரசு திணிக்க முயல்வதாக குற்றம் சாட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் “ கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதிகளை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு: என்ன வழக்கு?

இதனிடையே தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கறுப்பு மை கொண்டு அழித்து வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பொள்ளாச்சி ரயில்வே நிலையம், திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பலகையில் இருக்கும் இந்தி எழுத்துக்களை திமுகவினர் கறுப்பு மை கொண்டு அழித்தனர். இந்த செயலில் ஈடுபட்ட திமுகவினர் 6 பேர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அஞ்சலகங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்களில் இந்தியில் எழுதப்பட்ட எழுத்துகளை திமுகவினர் கறுப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோகன்தாஸ் பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்தி எழுத்துக்களை மத்திய அரசு அலுவலகங்களில் அழிக்கும் செயலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்துக்கு பெரிய பின்னடைவை, பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியே இல்லை, வன்முறையாளர்களின் ஆட்சிதான் இருக்கிறது என்று முதலீட்டாளர்கள் நினைக்கத் தோன்றும்.

தமிழகத்தின் பிராண்ட், பெயர் இந்த கலாச்சார வன்முறையால் மோசமாக மாறுவதற்குள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதை தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் “ மத்திய அரசு மொழிப்போருக்கான விதையைத் தூவுகிறது. நாம் தயாராக இருக்க வேண்டும், நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்பதை திரும்பக் கூறுகிறோம். அதேசமயம், எந்த மொழியும் நம்மை ஆதிக்கம் செய்ய அனுமதிக்கமாட்டோம். தமிழ்மொழி மறைக்கப்படக் கூடாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர், அமைச்சர் படம் எங்கே? திமுக, அதிமுக நிர்வாகிகள் மோதல்.. பூமி பூஜையில் கைகலப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share