கிராமசபை கூட்டங்களால் என்ன பலன்?...
இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டசபை ஆகியவைகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவை கிராமசபைகள். ஆனால் அவற்றின் முழுமையான அதிகாரத்தை தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் கடந்து போகிறோம் என்பதுதான் வேதனை.
குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2, உள்ளாட்சி தினமான நவம்பர் 1 மற்றும் உலக நீர்நாளான மார்ச் 22 ஆகிய ஆறு நாட்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்.
எளிய மக்களிடம் அதிகாரம் சென்றடைவதை உறுதிசெய்வதிலும், தங்கள் ஊருக்கான தேவை என்ன? என்பதை அவர்களே முடிவு எடுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டது தான் கிராமசபை. தமிழ்நாட்டில் மொத்தம் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 99, 333 பேர் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ கேம் பெயரில் ரூ.70 கோடி மோசடி! சைபர் குற்ற கும்பல் 30 பேர் சிக்கினர்..! உ. பி. யில் தமிழ் I.P.S
அரசு ஏதேனும் திட்டம் கொண்டு வந்தால் அதனை ஆதரித்தோ, எதிர்த்தோ அந்த கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு அரசாங்கம் தள்ளப்படும். அந்தவகையில் சக்தி படைத்த ஒரு அமைப்பு ஊராட்சி மன்றம்.
மேற்சொன்ன 6 நாட்களில் கிராமசபை கட்டாயம் கூடவேண்டும் என்பது விதி. இதற்கான அறிவிப்பாணை மாவட்ட ஆட்சியரால் ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கும். இன்று அதாவது ஜனவரி 26-ல் எத்தனை கிராமசபைகள் கூடுகின்றன. என்னனென்ன முடிவுகளை எடுக்கின்றன என்று கணக்கிட்டாலே அரசியலை மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கல்குவாரி, நில ஆக்ரமிப்பு, ஆபத்தான திட்டங்கள், மதுக்கடைகள் போன்றவற்றுக்கு எதிராக எத்தனை கிராமசபைகளில் இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பதை பொறுத்தே தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பை எப்படி சரியாக கையாள்கின்றனர் என்பது தெரியவரும்.
ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் வராமல் கூட கிராமசபை கூட்டங்களை பங்கேற்போரின் எண்ணிக்கை அடிப்படையில் நடத்த முடியும். பெண் தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுகிறதா? பட்டியலின சமூகத்தினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவற்றையும் இன்றைய தினத்தில் நாம் அறிந்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவ்வுர் ராணாவை இந்தியாவுக்கு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி