×
 

தொடரும் நக்சல் வேட்டை.. நக்சலைட் 22 பேர் அதிரடி கைது..! சொல்லி அடிக்கும் அமித் ஷா..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்களுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின்போது, அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  நாராயண்பூர், ஜெகதல்பூர், தந்தேவாடா, பஸ்தர், பீஜப்பூர் பகுதியில் காட்டுக்குள் பதுங்கி வாழும் நக்சல்களை ஒடுக்க சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

2026 மார்ச் மாதத்துக்குள் இந்தியாவை நக்சலைட்கள் இல்லாத நாடாக உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி தெரிவித்துள்ளார். அதன் படி நக்சலைட் அமைப்பை சேர்ந்தோர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நக்சலைட்களுக்கு இரக்கம் காட்டாத அணுகுமுறையுடன் மோடி அரசு முன்னேறி வருகிறது. சரண் அடைவது முதல் தேசிய நீரோட்டத்தில் இணைவது வரை அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. சரணடையாத நக்சலைட்களுக்கு எதிராக சிறிதும் சகிப்புத்தன்மை காட்டப்படாது. அதில் அரசு உறுதியாக உள்ளது என அமித்ஷா கூறி உள்ளார்.

இதையும் படிங்க: ஆயுதங்களை கீழே போடுங்கள்.. நக்சல்களுக்கு அமித் ஷா அறிவுரை.. நக்சல் இல்லா கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு..!

இந்த அழைப்பை ஏற்று சரண் அடைந்த நூற்றுக்கணக்கான நக்சலைட்களுக்கு புதிய வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும், நக்சலைட்களை ஒடுக்கும் பணி தொடர்ந்து வருகிறது. ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎப் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் காட்டுப்பகுதியில் களம் இறங்கியுள்ளனர். பாதுகாப்பு படையினர் - நக்சல்கள் இடையே அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில், நக்சலைட் அமைப்பை சேர்ந்த பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பீஜபூர் மாவட்டம் தெக்மெட்லா கிராமத்தை ஒட்டிய காட்டுக்குள் பதுங்கியிருந்த நக்சலைட்கள் 7 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். பெல்சார் கிராமத்தில் பதுங்கியிருந்த 6 நக்சலைட்கள், கண்டகாரா பகுதியில் பதுங்கியிருந்த 9 பேர் என நக்சலைட் அமைப்பை சேர்ந்த மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து டிபன் பாக்ஸ் பாம், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், எலக்ட்ரிக் ஒயர்கள், பேட்டரிகள், துப்பாக்கிகள் மற்றும் நக்சல் அமைப்பின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். 

கைதானவர்களில் சிலர், தேடப்படும் குற்றவாளிகளாகவும், அவர்களின் தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கைதானவர்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் கூறினர். ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 10 நாள் நக்சல் வேட்டை.. முக்கிய தலை உட்பட 48 பேர் அவுட்.. ரூ.25 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர் காலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share