×
 

சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அதிகரித்துள்ள நிலையில், சிறுமிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இருவேறு இடங்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டியது மட்டும் அல்லாமல், அந்த சிறுமியிடம் நிர்வாண படங்களையும் கேட்டு மிரட்டிய இளைஞர் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமியிடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான இளைஞர் ஒருவர் சிறுமியிடன் நிர்வாண புகைப்படங்களை கேட்டு மிரட்டல் விடுத்ததால் போலீசார் அவரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து உடனுக்குடன் இதுபோல் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் வலியுறுத்தினர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருடன் முகநூல் வலைதள பக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கலையரசன் என்பவர் நண்பராக இணைத்து கொண்டுள்ளார். பின்னர் பள்ளி மாணவியிடம் பேசிப்பழகிய கலையரன், மாணவியிடம் உன்னுடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனவும் பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவியின் போட்டோவை மார்பிங் செய்து அவரது நண்பர்கள் ஐந்து பேருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த மாணவி அழுது கொண்டு பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: 14 பேர் சேர்ந்து சிறுமிகளை சீரழித்த கொடூரம்... புதுவையை உலுக்கும் சம்பவம்!

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியிடம் முகநூல் பக்கத்தில் நண்பராகி மாணவியின்  போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டி வந்த கலையரசனை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவரது நண்பர்களான பூங்குளம் பகுதியை சேர்ந்த ரஞ்சித், சந்தோஷ் மற்றும் சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்து பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 5 பேரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறுவர்கள் இரண்டு பேரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை செல்போன் மூலமாக துன்புறுத்திய பட்டதாரி இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வள்ளியூர் அருகே உள்ள கண்ணன்நல்லூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை. வயது 23. இவர் பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். சமீப காலமாக 14 வயது சிறுமி ஒருவரிடம் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சின்னத்துரையை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு ஸ்கெட்ச்... கட்டம் கட்டி அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share