வெள்ளையடிக்க வந்து நோட்டமிட்ட திருடன்.. உஷாரான தம்பதி.. மாடி வழியாக ஏறிக்குதித்து துணிகர திருட்டு..!
சேலத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த தம்பதியை தாக்கிவிட்டு 7 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ் (வயது 75). இவரது மனைவி பிரேமா (வயது 67). இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகி தனியே சென்று விட, கணவன் மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம், காலை வேளையில் இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபன் வந்துள்ளான். வாசலில் நின்றபடி தாகமாக இருக்கிறது. தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளான்.
அந்த இளைஞரை என்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என யோசித்தபடியே அந்த முதிய தம்பதி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் குடிக்க வந்த இளைஞனின் முழி சரியில்லை என அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்த இளைஞன் வீட்டில் உள்ளவற்றை நோட்டமிட்டதையும் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் தண்ணீர் குடித்த அந்த இளைஞர் சென்று விட, மீண்டும் மதிய வேளையில் இவர்களது வீட்டிற்கு அதே வாலிபன் வந்துள்ளான். மீண்டும் அதே போல் தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளான். அப்போது வீட்டின் முன் பகுதி இரும்பு கதவு தாளிடப்பட்டிருந்தது.
அந்த முதிய தம்பதி தண்ணீர் எடுத்து வர எத்தனித்த போது, மேலும் ஒரு இளைஞன் அங்கு வருவதை கவனித்துள்ளனர். இதனால் உஷாரான முதிய தம்பதி, தண்ணீர் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து உள்ளனர். முன்னாள் இருந்த இரும்பு கிரில் கேட்டை திறக்கவே இல்லை. இளைஞர்களை பேசியே அனுப்பி விட்டனர்.
இதையும் படிங்க: டாக்டரே இப்படியா? கடத்தல்காரனாக மாறிய பல் மருத்துவர்.. சொத்துக்காக அண்ணண் மீது தாக்குதல்..!
ஆனால் அந்த இரண்டு வாலிபர்கள் பக்கத்து வீட்டு மாடி படியில் ஏறி மாதவராஜ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் மாதவராஜை தாக்கிவிட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு, அவர்களது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அந்த முதிய தம்பதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்கள் முகம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இது குறித்து மாதவராஜ் கூறும்போது தண்ணீர் கேட்டு வந்தவர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது வீட்டில் வெள்ளையடிப்பதற்காக வந்தவர் என தெரிவித்தார். அதனால் காலையில் அவர் தண்ணீர் கேட்டு வந்தபோது தண்ணீர் கொடுத்தோம். பின்னர் மதியம் திரும்பவும் வந்து தண்ணீர் கேட்டபோது இல்லை என்று மறுத்து அனுப்பி விட்டோம்.
அதன் பிறகு தான் அவர்கள் பக்கத்து வீட்டு மாடிப்படியில் ஏறி தங்களை வீட்டுக்குள் நுழைந்து தங்களை மிரட்டி ஏழு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர் என்றார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 22 மேல் ஆசைப்பட்ட 58? அம்மா, அப்பா கண் எதிரே.. இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்..!