டாக்டரே இப்படியா? கடத்தல்காரனாக மாறிய பல் மருத்துவர்.. சொத்துக்காக அண்ணண் மீது தாக்குதல்..!
சின்னசேலம் அருகே சொத்து பிரச்னைக்காக அண்ணனை காரில் கடத்திச் சென்று தாக்கிவிட்டு சாலையில் வீசிவிட்டுச் சென்ற பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே, குரால் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் ஓய்வு பெற்ற வனவர். செல்லமுத்துவுக்கு இரண்டு மனைவிகள். செல்லமுத்துவின் முதல் மனைவி சின்னபொன்னு. அவருக்கு சேகர் (வயது 45) என்ற மகன் உள்ளார். சேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செல்லமுத்துவின் இரண்டாவது மனைவி மல்லிகா.
இவருக்கு சின்னமணி (வயது 37) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். செல்லமுத்துவுக்கு குரால் பகுதியில் 11 ஏக்கர் நிலம், மூன்று வீடுகள் உள்ளது. மகன்களான சேகர் மற்றும் சின்னமணி ஆகியோருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 6 ஆம் தேதி, செல்லமுத்துவின் முதல் மனைவியின் மகனான சேகர், சேலம் மாவட்டம் ஆத்துாரில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். மாலை 6 மணி அளவில், கூல்ட்ரிங்ஸ் கடையில் நின்றிருந்த அவரை, எதிரே காரில் வந்தவர்கள் அழைத்துள்ளனர். தெரிந்தவர்கள் யாரோ கூப்பிடுவதாக நினைத்து சேகர் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த ஐந்து பேர் சேகரை காரில் கடத்திச் சென்றனர். போகும் வழியில் தான், கார் ஓட்டிச் சென்றது பல் மருத்துவரான தம்பி சின்னமணி என்பது அண்ணன் சேருக்கு தெரியவந்தது.
ஆள் நடமாட்டம் இல்லாத வி.கூட்ரோடு ஆட்டுப்பண்ணை பகுதிக்கு சேகரை கடத்திச் சென்ற தம்பி சின்னமணி மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வைத்து சேகரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். தவிர, சேகரின் மர்ம உறுப்பிலும் இரும்பு கம்யியால் தாக்கி கொடுமை படுத்தி உள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் இருந்த சேகரை, அதே காரில் ஏற்றி வந்து நள்ளிரவு நேரத்தில் தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காரில் இருந்து கீழே தள்ளவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேகரின் தங்கை சுதா, காயமடைந்த சேகரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க: 22 மேல் ஆசைப்பட்ட 58? அம்மா, அப்பா கண் எதிரே.. இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்..!
இதுகுறித்து நேற்று முன்தினம் சேகர் அளித்த புகாரில் தலைவாசல் போலீசார், தம்பியான பல் மருத்துவர் சின்னமணி உள்பட ஐந்து பேர் மீது 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் இருந்த தம்பி சின்னமணியை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ‘ஸ்கார்பியோ’ காரையும் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள சின்னமணியின் நண்பர்கள் நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக நன்றாக படித்து மருத்துவராக உள்ள தம்பியே, சொந்த அண்ணனை ஆள் வைத்து கடத்தி அடித்து கொடுமை படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இது டீச்சர் வீடு இல்லையா? வீடுமாறி திருடப்போன கொள்ளையர்கள்.. இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!