அன்னை இல்லத்தின் ஓனர் நடிகர் பிரபு தான்... சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமாக துஷ்யந்த், அவரது மனைவியுடன் இணைந்து, ஈசன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதோடு, அந்த கடனை வருடத்திற்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்தனர்.
இந்நிலையில் நடிகர் துஷ்யந்த், வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் பட உரிமைகளை வழங்காததால் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அன்னை இல்லம் ஜப்தி செய்யும் விவகாரம்.. நடிகர் பிரபு நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
இதனைதொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், 'அன்னை இல்லம் எனது வீடு அல்ல, தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு அளித்தார். இதேபோல் பிரபு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எனது தந்தை சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே, அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்தார். இதற்கு என் உடன்பிறந்தவர்கள் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து எனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. எனவே, அன்னை இல்லத்தின் முழு உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது. என் அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என பிரபு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதை ஏற்ற நீதிமன்றம் துஷ்யந்தின் தந்தை ராம்குமாரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ராம்குமாரும் அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீதிக்கு வந்த அன்னை இல்லத்தின் கடன் வழக்கு.. ராம்குமாருக்கு உதவ முடியாது.. நடிகர் பிரபு திட்டவட்டம்..!