அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கருக்கு ரிலீப்.. வழக்குகளில் இருந்து விடுவித்த நீதிமன்றம்..!
தமிழக அமைச்சர்கள்அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கரன் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கரன் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவையில் இனி விவாதங்கள் தான்.. பதில் அளிக்கப்போகும் அமைச்சர்கள்..!
அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர் சிவசங்கரன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆளுங்கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகள் எளிதில் ரத்து செய்யப்படுவதாக அதிமுக ஏற்கனவே குற்றஞ்சாட்டி வந்தது. இதனை மெய்ப்பிப்பது போல் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இதேபோன்று ஆளுங்கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு காவல்முறை உடனே ஒப்புதல் அளித்து விடுவதாகவும், எதிர்கட்சியினர் போராட்டங்களுக்கு அவ்வாறு அனுமதி தரப்படுவதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. சமீபத்தில் தவெக சார்பில் விஜய் நடத்திய அக்கட்சியின் இரண்டாமாண்டு தொடக்கவிழாவுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய தினம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பாஜக முயன்றபோது அனுமதி மறுப்பைக் காரணம் காட்டி பலர் கைது செய்யப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலையில் தொடர்பா..?