மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்... வலுக்கும் கண்டனம்!!
பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்போது வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது வழக்கை எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளார். நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார்.
ஆனால் அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை. அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார். அவர் தன் தொடையை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா இவ்வளவு இடம் இருக்கே இங்கே உட்கார கூடாதா? என்று கூறுகிறார். அவருடைய இந்த செயல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளதாக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இதனிடையே பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கானா பாடகி இசைவாணிக்கு எதிராக அவதூறு.. 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!
இதுக்குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூலில் மறுபதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்ளும் பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தை எஸ்.வி.சேகர் நாடியுள்ளார். இந்தநிலையில், எஸ்.வி.சேகர் சமீபத்தில் நடத்தியுள்ள நாடகத்தில், பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலும், அவர்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமுறை பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதற்கு, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் தற்போத அதே தவறை மீண்டும் செய்துள்ளார். இதன்மூலம், தான் செய்த தவறை எஸ்.வி.சேகர் உணரவில்லை என்பது உறுதியாகிறது. மேலும், தான் செய்வது என்வென்பதை அறிந்தே அவர் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
ஆகவே, பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் கீழ்த்தரமாக பேசியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. எஸ்.வி.சேகர் நடத்திய நாடகத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்று காட்சி தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதேபோல், உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆண்டு விழாவில் ஷாக் கொடுத்த மாணவர்கள்... உடனே பறந்த நோட்டீஸ்!!