காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு; நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசி தாக்குதல் - வைரல் வீடியோ!
அவிநாசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவிநாசி வட்டார, நகர மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கோபிநாத் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு முறையாக தகவல் தரவில்லை எனக்கூறப்படுகிறது.
மேலும் நகரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதும் குறித்து முன்னாள் நகர பொறுப்பாளர் பொன்னுகுட்டி, ஊடக பிரிவு மாநில பொதுச் செயலாளர் சாய் கண்ணன், வட்டார செயலாளரும் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவருமான மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வந்து, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபிநாத் பழனியப்பனிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு 😂😂 pic.twitter.com/lrx8nkGgaT
— Poongodi Suganth (Modi Ka Parivar) (@PoongodiSugandh) January 31, 2025
இதையும் படிங்க: தலித், ஓபிசிகளின் நம்பிக்கையைப் பெற காங்கிரஸ் தவறிவிட்டது: ராகுல் காந்தி ஓபன்டாக்
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை தொண்டர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு ஆத்திரமடைந்த கோபிநாத் பழனியப்பன் மேடையிலிருந்து வேகமாக கீழே வந்து செல்போனை தட்டி விட்டார் அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கோபிநாத் பழனியப்பன் மேடையிலிருந்த மணமகன் அறைக்கு சென்றார். அப்போது, முன்னாள் நகர தலைவர் பொன்னுக்குட்டி, சேயூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணசாமி, ஊடக பிரிவு மாநில பொதுச் செயலாளர் சாய் கண்ணன் உள்ளிட்ட வர்கள், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதையடுத்து பைல்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் கடும் பதற்றம் நிலவியது. இதையடுத்து மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: காந்தியை சுட்டுகொன்று கொண்டாடியவர்கள் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள்.. சொல்லுங்க ஆளுநரே.. செல்வபெருந்தகை கிடுக்கிப்பிடி.!