×
 

பணிக்கு வராத அரசு மருத்துவர்..? வேறு டாக்டர் வைத்து சிசேரியன்.. பிறந்த 10 நிமிடத்தில் இறந்த குழந்தை..!

போடிநாயக்கனூரில் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை 10 நிமிடங்களில் இறந்த நிலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி இவரது மனைவி சரண்யா வயது 25. இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் ஒன்றரை வருடம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சரண்யா போடிநாயக்கனூர் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் என்பதால் தலைப்பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இங்கு கடந்த மூன்று மாத காலமாக அரசு மருத்துவர் சுகந்தி என்பவரிடம் அவர் சொந்தமாக வைத்திருக்கும் தனியார் மருத்துவமனையில் சோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் சரண்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சரண்யாவை அவரது உறவினர்கள் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் இரவு பிரசவம் பார்ப்பதற்கு டூட்டி டாக்டர் இல்லாத நிலையில் இன்று காலை அவருக்கு மாற்றாக வேறு ஒரு பணி மருத்துவர் வைத்து அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசவம் பார்த்த பத்து நிமிடத்திலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரவு முதல் காலை வரை டூட்டி டாக்டர் வராத நிலையில் வேறு மருத்துவரை வைத்து பிரசவம் பார்த்ததால் தவறு நேர்ந்ததாக கூறி வினோபாஜி காலனி பொதுமக்கள் மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: அக்காவை இரும்பு ராடால் தாக்கிய தம்பி.. 13 வயது சிறுவன் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் அக்கா..!

சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்து வந்த போடிநாயக்கனூர் ஊரக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு உடன்படாத பொதுமக்கள் பணிக்கு வராத பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

போடிநாயக்கனூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் வெளியில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வந்து சிகிச்சை பார்க்கும் சூழல் உள்ளதாகவும் கூறினார். போடிநாயக்கனூர் மருத்துவமனையில் குழந்தை பிறந்து இறப்பது இதுவே முதல் முறை என்பதால் இனி இதுபோல் தவறுகள் ஏற்படாமல் மருத்துவர்களை பணியாற்ற உரிய முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

பணி நேரத்தில் வரவில்லை என்று குற்றம் சாற்றப்படும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தலைமை மருத்துவர் உறுதியளித்தார். அதனைத் அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக புறப்பட்டு சென்றனர்.

போடிநாயக்கனூர் மருத்துவமனையில், மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட 60 நபர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது சுமார் 20 நபர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் இப்பகுதியில் அரசு மருத்துவமனை மீது பொது மக்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும்  ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரத்துறை பற்றாக்குறை உள்ள பணியிடங்களை நிரப்பி இதுபோன்று சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜயை எதிர்த்து தேர்தலில் போட்டி: ‘புலி’படத் தயாரிப்பாளரை களமிறக்கும் திமுக..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share