அடிப்பியா? அடிப்பியா? அடிச்சு பாரு..! கமிஷ்னருடன் சண்டைக்கு நின்ற கவுன்சிலர்.. திருச்சியில் பரபரப்பு..!
திருச்சியில் மறியலில் ஈடுபட்ட கவுன்சிலரை, கமிஷ்னர் கடிந்து கொண்டதற்கு, அடிப்பீங்களா? அடிப்பியா? அடிப்பியா? அடிச்சு பாரு என கோபத்துடன் திமுக கவுன்சிலர் பேசி சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி எடமலைபட்டிபுதூர் 57வது வார்டு நல்லகேணி தெருவை சேர்ந்தவர் முத்தையன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நல்ல கேணி தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்தனர். அந்த தெருவில் முத்தையன் ஒரு போர்டு வைத்திருந்தார்.எனது நிலத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அந்த போர்டில் முத்தையன் எழுதியிருந்தார்.
சாலை அமைக்க வசதியாக அந்த போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியபோது முத்தையன் மகள் கிருத்திகா தேவிக்கும், திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். முத்துச்செல்வம் கிருத்திகா தேவியைத் தாக்க அவரது வீட்டின் கேட்டை உடைக்க முயன்றார்.
உடன் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்தது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி இது தொடர்பான வீடியோவை யாரோ சிலர் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பரப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் முத்துச்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டவே போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் அங்கு வந்து திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்திடம் சமாதானம் பேசினார்.
இதையும் படிங்க: நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு - கடும் வாக்குவாதம்..!
என்னிடம் சொல்லி இருக்கலாமே, இவ்வளவு பேரை ஏன் கூட்டி வந்தீர்கள் என போலீஸ் அதிகாரி ஈஸ்வரன் கேட்க, கவுன்சிலர் முத்துச்செல்வம் கோபத்துடன் பதிலுக்கு பேச, இருவருக்கும் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.கடும் கோபத்துடன் முத்துச்செல்வத்தை துணை கமிஷனர் ஈஸ்வரன் எச்சரித்தார்.
அப்போது, முத்துச்செல்வம் அடிப்பீங்களா, அடிப்பியா, அடிப்பியா, அடிச்சுப்பாரு என கோபத்துடன் பேசினார். துணை கமிஷனர் ஈஸ்வரனும் பதிலுக்கு கை விரலை நீட்டி முத்துச்செல்வத்தை மீண்டும் எச்சரித்தார். அருகில் இருந்த திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி ஆணையர் ஸ்ரீதர் தலையிட்டு முத்துச்செல்வத்தை சமாதானப்படுத்தி தனியாக அழைத்துச் சென்றார்.
பிறகு பொதுமக்களை காவல்துறையினர் பேசி அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைய செய்தனர். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டு இருந்தது சிறிது நேரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
திராவிட மாடல அரசையும் முதல்வரையும் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டு என்னை பற்றி தற்குறி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இதனால் தன்னை பற்றி செய்தி வெளியான நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் இடம் மனு கொடுக்க தனது வார்டு மக்களுடன் வந்ததாக கவுன்சிலர் முத்துச்செல்வம் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பஸ் ஸ்டாண்ட்ல பாம் இருக்கு..! போலீசாருக்கு வந்த மிரட்டல் போன்கால்.. லால்குடி பஸ் ஸ்டாண்ட் ஹை அலர்ட்..!