விஷம் பரப்பும் தி.மு.க... மொழியின் பெயரால் நாட்டைத் துண்டாடுகிறது- அமித் ஷா ஆவேசம்..!
இந்திய மொழிகளை விட சிலருக்கு அந்நிய மொழிகள் மீதே ஆர்வம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு செய்யப்படும்
'திமுக மொழியின் பெயரில் நாடு முழுவதும் விஷத்தை பரப்புகிறது. நாட்டை துண்டாடுகிறது'' என மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசமடைந்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விளக்கம் அளித்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பயங்கரவாதம், ஜம்மு காஷ்மீர், நக்சலிசம், மொழிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பேசியபோது இறுதியில் தமிழகத்தில் திமுக அரசு நடத்தும் அரசியல் குறித்தும் விமர்சித்துப்பேசினார்.
''ஊழலை மறைக்க சிலர் மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர். இந்திய மொழிகளை விட சிலருக்கு அந்நிய மொழிகள் மீதே ஆர்வம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு செய்யப்படும் . டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் அவர்களின் தாய்மொழிகளில் மட்டுமே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வேன். சிலர் தங்கள் ஊழலை மறைக்க மொழிப் பிரச்சினையை எழுப்புகிறார்கள். திமுக மொழியின் பெயரில் நாடு முழுவதும் விஷத்தை பரப்புகிறது. நாட்டை துண்டாடுகிறது. நாங்கள் மொழிகளுக்காகப் பாடுபட்டுள்ளோம். இந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்துள்ளோம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம். நாடு முன்னேறியுள்ளது, முன்னேற்றம் பற்றிப் பேசுகிறது. ஊழலை மறைக்க நீங்கள் மொழியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது.
பிராந்திய மொழிகளை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்? நாங்களும் பிராந்திய மொழியில் இருந்து வந்தவர்கள் தானே. நான் குஜராத் மொழி பேசுகிறேன். நாங்களும் பிராந்திய மொழி பேசுபவர்கள் தானே. நிர்மலா சீதாராமன் தமிழ் பேசுபவர். இவர்களுக்கு தாய் மொழி மீது பற்று என்பதைவிட, அரசியல் காரணங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது” என்று அமித் ஷா ஆவேசமாக பேசினார்.
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ 1000 கோடி மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படும் வலுத்துள்ளதால், ஊழலை மறைக்க மொழிப் பிரச்சினையை திமுக எழுப்புவதாக பெயரைச் சொல்லாமல் அமித்ஷா மறைமுகமாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அப்போ 10 கொலை.. இப்போ 8 கொலை.. கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை.. ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!