தனியாக இருந்த முதியவர்கள் அடித்துக்கொலை.. வீட்டிற்கு தீ வைத்த கும்பல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவரையும் அவரது உறவினரான 60 வயது மூதாட்டியையும் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு கொலையை திசை திருப்ப வீட்டில் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 70). இவரது மனைவி தெரசாள் (வயது 65). இவர்களுக்கு சகாய ராணி (வயது 48) மற்றும் விக்டோரியா (வயது 43) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். தெரசாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகள் சகாய ராணி அவருக்கு உதவியாக சென்னையில் இருந்து வருகிறார். வீட்டில் லூர்துசாமி மட்டும் தனியாக இருந்த நிலையில் அவருக்கு துணையாகவும் சமையல் செய்து கொடுக்கவும் தெரசாளின் தங்கையான எலிசபெத் (வயது 60) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை லூர்துசாமியும் எலிசபெத்தும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளனர். உடலில் பல இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் அங்கேயே பரிதாபமாக இறந்து போயினர். பின்னர் கொலையாளிகள் கொலையை திசை திருப்ப வீட்டில் இருந்த பொருள்களில் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. லூர்து சாமியின் வீட்டிற்குள் இருந்து தீப்பிடித்து எரிந்து புகை வெளியே வருவதை பார்க்க அக்கம் பக்கத்தினர் அவர்களது உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து சிறுமிகளை சிதைத்த கொடூரம்.. ஓசூரில் 5 சிறுவர்கள் போக்சோவில் கைது..
அதனைத் தொடர்ந்து ஓசூர் நகர போலீசார் மற்றும் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் எரிந்த தீயை அணைத்தனர். உடலில் வெட்டுக்காயங்களுடனும் தீக்காயங்களுடனும் லூர்துசாமியும் எலிசபெத்தும் உயிரிழந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை, மற்றும் ஏ டி எஸ் பி சங்கர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மோப்ப நாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக இரண்டு பேரின் உடல்களையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் பீரோ உடைக்கப்படவில்லை எனவும், லூர்து சாமியின் சட்டை பையில் இருந்த 1600 ரூபாய் பணம் அப்படியே உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் நகை பணத்திற்காக கொலை நடக்கவில்லை மாறாக வேறு என்ன காரணத்துக்காக இந்த கொலை நடந்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லூர்துசாமியின் சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் கிராமம். அங்கிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல கொலை செய்யப்பட்ட எலிசபெத் மன்னார்குடி அருகே உள்ள சேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் எனவும் அவருக்கு 2 மகன்கள் உள்ளதாகவும் கணவர் இல்லை எனவும் கூறப்படுகிறது. கொலை சம்பவம் குறித்து லூர்துசாமியின் உறவினர்களிடம் நடத்தப்படும் விசாரணையை தொடர்ந்தே கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி நண்பருக்கு ஸ்கெட்ச் போட்ட குரூப் கைது.. மனைவியிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசியது அம்பலம்..!