நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... கம்பி நீட்டிய 2 மாஜி அமைச்சர்கள்!
சட்டப்பேரவை கூட்டுத்தொடர் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போதுவரை முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும் பொன்முடி ஆப்சென்ட் ஆகியிருக்கிறார்கள்.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜியிடம் அமைச்சராக தொடர வேண்டுமா? ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என நீதிமன்றம் கறாராக கூறி 28ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே அவரை அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாகவே அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!
அதேபோல் தொடர் சர்ச்சைப் பேச்சுக்களில் சிக்கிய அமைச்சர் பொன்முடி சைவ-வைணவ பேச்சால் கட்சிப்பதவியை இழந்தார். உயர்நீதிமன்றமும் கடுமை காட்டியதால் பொன்முடியும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று இருவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று இருவருமே சட்டப்பேரவைக்கு வராமல் தவிர்த்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் இன்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இருவருமே அவைக்கு வராத நிலையில், அவர்களுக்கு இன்னும் இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக அமைச்சர்களாக இருந்ததால், பொன்முடிக்கு முதல் வரிசையிலும், செந்தில் பாலாஜிக்கு மூன்றாவது வரிசையிலும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல் மூன்று வரிசைகள் ஆளும் கட்சி தரப்பில் அமைச்சர்கள் தான் அமர்வார்கள். எனவே அந்த இடத்திலே அவர்கள் அமர்ந்து வந்தார்கள். தற்போது அவர்கள் அமர்ந்த இடம் என்பது காலியாக இருக்கிறது. அந்த இடத்தில் யாருமே அமரவில்லை, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் அமர்ந்திருந்த இடங்களில் மேசை மீது கணினி இருக்கும் அந்த கணினி கூட ஆன் செய்யப்படவில்லை.
மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருடைய மேசை கணினியும் ஆன் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அதிலே பல்வேறு கோப்புகளை பார்த்து வருகிறார்கள். இதுவரை அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் தான் இருவரும் சட்டப்பேரவைக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது.
இன்று மாலை மனோ தங்கராஜ் அமைச்சரவையில் மீண்டும் இணைகிறார். மற்ற சில அமைச்சர்களுக்கும் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே சீனியாரிட்டி அடிப்படையில் புதிய அமைச்சரவை பட்டியலானது வெளியிடப்பட்டு, அந்த சீனியாரிட்டி அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
பொன்முடி சீனியாரிட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அந்த இடத்தில் எ.வ.வேலு அமருவாரா? வேறு யாராவது அமர்வார்களா? என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் ரீஎண்ட்ரி.. மனோ தங்கராஜூக்கு என்ன துறை?