மனைவியிடம் அத்துமீறல்.. RCB வெற்றியை கொண்டாட அழைத்துச் சென்று கதையை தீர்த்து கட்டிய நண்பர்கள்..
சென்னையில் மது போதையில் நண்பனின் மனைவிடம் தகராறு செய்த நபரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பெருங்குடி கள்ளுகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பு. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்களான ஜீவரத்தினம், கோகுல், ஜெகதீசன், அஜய், ரமேஷ் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் மாலை ஒன்றாக மது அருந்தி உள்ளனர். இதையடுத்து, மது அருந்திக் கொண்டு இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். முன்னதாக அப்புவின் மனைவியை வேலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர அவரின் நண்பர் ஜீவரத்தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஜீவரத்தினம் அப்புவின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, வீட்டிற்குச் சென்ற அப்புவிடம், கோபமாக இருந்த அவரது மனைவி, உங்களின் நண்பர் ஜீவரத்தினம் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். இதனால், ஜீவரத்தினத்தின் மீது அப்பு கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும், அன்று இரவு ஆர்சிபி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் ஜீவரத்தினத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட அப்பு, “ஆர்சிபி அணி வெற்றியை மது அருந்திக் கொண்டாட வேண்டும்” என அழைத்துள்ளார். இதனை நம்பி ஜீவரத்தினம் சென்னை பெருங்குடி கள்ளுகுட்டை பகுதிக்குத் தனியாக வந்துள்ளார்.
இதையும் படிங்க: பாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த பேரன்.. போலீசார் விசாரணை..!
அங்கு நண்பர்கள் நான்கு பேருடன் காத்திருந்த அப்பு, ஜீவரத்தினதை சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ஜீவரத்தினத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அருகில் இருந்த துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ஜீவரத்தினத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அப்புவுடன் கோகுல், ஜெகதீஷ், அஜய், ரமேஷ் ஆகிய ஐந்து பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிவி சத்தத்தால் அரங்கேறிய விபரீதம்.. கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு..