கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்.. காட்டை விட்டு வெளியேறி மர நிழலில் அமர்ந்திருக்கும் புள்ளி மான்கள்.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் நிழல் தேடி புள்ளி மான்கள் சில சாலையோரம் உள்ள வனப்பகுதியில் உள்ள மர நிழலில் அமர்ந்திருக்கும் காட்சி சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகமானது புலி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.
இதில் ஆசனூர் வனப்பகுதியில் புள்ளிமான்களின் அதிகளவில் உள்ளன. தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் புள்ளிமான்கள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாத காரணத்தால் அப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதியில் வசிக்கும் புள்ளிமான்கள், தீவனம் மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது காடுகளை விட்டு வெளியேறி மனிதர்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து வருகின்றன.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. காவலர்களுக்கு இலவச நீர்-மோர் பந்தல் திறப்பு!
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புள்ளி மான்கள் சாலையோர வனப்பகுதியில் உள்ள மரத்தின் நிழலில் படுத்து ஓய்வெடுக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகளையும் தாக்குவதால் வனத்துறையினர், வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வனப்பகுதியில் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜா கச்சேரியில் இவர்களுக்கு இலவச டிக்கெட்... ஆட்டோ, பஸ் டிரைவர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்!