ஜெயலலிதா ஆபரணங்கள் ஒப்படைப்பு...எல்லை வரை சென்று வழியனுப்பிய கர்நாடக போலீஸ்...
கர்நாடக கருவூலத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாதுகாப்புடன் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ ஆபரணங்கள் மற்றும் நில ஆவணங்களை கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக லஞ்சஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்தது. அவர்கள் அதை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வைரம் ஆபரணங்கள் மற்றும் 1,526 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களையும் இன்று பிற்பகல் 1.30 மணி வரை தமிழக லஞ்சஒழிப்பு போலீசாரிடம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் கடந்த 19 ஆண்டுகளாக கர்நாடக அரசு கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு செந்தமான ஆபரணங்கள் முறைப்படி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் நாளான நேற்று 5 மணி 30 நிமிடமும், 2வது நாளான இன்று 2 மணி 30 நிமிடம் என மொத்தம் 8 மணி நேரம் ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம்....ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம்...தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
நீதிமன்றம் ஒப்படைத்த ஆபரணங்கள் 6 பெரிய பெட்டிகளில் சீல் போடப்பட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரின் பாதுகாப்புடன் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக போலீசார், கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திபள்ளி வரை சென்று வழியனுப்பினர்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மொத்தம் 27 கிலோ தங்க, வைர ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது மொத்தம் 481 ஐட்டங்களாக (பொருட்களாக) இருந்தது. இதில் 192வது பொருளில் மட்டும் 1.44 கிலோ ஓட்டியானம் இருந்தது. இதில் 2,289 வைர கற்கள், 18 மரகதம், 9 மாணிக்கம் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. தங்க ஆபரணங்களில் ஒட்டியானம், தங்க கிரிடம், தங்க வளையம், ஹாரம், கழுத்து செயின், தங்க வீர வாள், வைர நெக்லஸ், தங்க கை கடிகாரம், தங்க எழுதுகோள் (பேனா) உள்ளிட்ட ஆபரணங்கள் இருந்தது.
இது தவிர சொத்து குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ், சிக்னோரா என்டர் பிரைசஸ், மெடோ ஆக்ரோபார்ம், ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ், ரிவர்வே ஆக்ரோ மற்றும் இந்தோ டோத கெமிக்கல் ஆகிய 6 நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,526.16 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கு செலவு ₹ 13 கோடி
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச். வி. மோகன் பிறப்பித்த உத்தரவில், சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடத்திய தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வழக்கு காலத்தில் பறிமுதல் செய்து, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 27 கிலோ ஆபரணங்கள் முறைப்படி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வழக்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ₹ 59,870 மற்றும் ₹ 1,60,514 ஆகிய நோட்டுகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்த 2023ல் பெற்ற கணக்கெடுப்பு படி, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரின் வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைத்திருந்த ₹ 10,18,78,591 தொகையை தமிழ்நாடு அரசு கணக்கில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படம் 27 கிலோ தங்க ஆபரணங்களை இந்திய ரிசர்வ் வங்கி அல்லது வேறு வழியில் விற்பனை செய்து கொள்ளலாம். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களில் 6 கம்பெனிகள் பெயரில் வாங்கி இருக்கும் 1,526.16 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. அரசு தேவைக்கு ஏற்றப்படி பயன்படுத்தி கொள்ளலாம்.
வழக்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு பேருந்து TN 09-FO2575 தமிழ்நாட்டில் உள்ளது. அதையும் தமிழ்நாடு அரசு விற்பனை செய்ய அனுமதி வழங்குகிறேன். மேலும் சொத்து குவிப்பு வழக்கு தனிநீதிமன்றத்தில் நடந்த போது ஏற்பட்ட செலவு ₹ 5 கோடி மற்றும் அதன் பின் கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்த வழக்கு விசாரணைக்கு ₹ 8 கோடி என மொத்தம் ₹ 13 கோடி செலவாகியது.
இந்த தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். ஆனால் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அபராதமாக செலுத்திய ₹ 20 கோடியே 20 ஆயிரம் கர்நாடக அரசிடம் உள்ளது. அதில் நீதிமன்ற செலவு ₹ 13 கோடி கழித்து மீதியுள்ள ₹ 7 கோடியை தமிழ்நாடு அரசிடம் வழங்க உத்தரவிட்டார். வழக்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டு சேலைகள், வெள்ளி பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் கர்நாடகம் கொண்டுவரவில்லை என்பதால், அது தொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதி பிறப்பித்த உத்தரவை அரசு சிறப்பு வக்கீல் கிரண் எஸ். ஜவளி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
* தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் 8 பெட்டிகள் கொண்டு வந்திருந்தனர். அதில் 6 பெட்டிகளில் ஆபரணங்கள் நிரப்பி சீல் போடப்பட்டது. அதில் நீதிபதி மற்றும் தமிழ் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். காலியாக 6 சூட்கேஸ்கள் கொண்டு செல்லப்பட்டது.
* தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பி விமலாவின் கார் முன் செல்ல, அதன்பின் துணை போலீஸ் எஸ்பி காரும் மூன்றாவது ஆபரணங்கள் எடுத்து சென்ற வாகனமும், பின்னால் துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு போலீசார் மூன்று வாகனங்களில் சென்றனர். முன்னாக பெங்களூரு போலீசாரின் பாதுகாப்பு வாகனம் சென்றது.
* நீதிமன்ற வளாகத்தில் இருந்து வாகனத்தில் ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் ஸ்டக்சரில் கொண்டுவரப்பட்டது. அதை வாகனத்தில் ஏற்றியபோது, நூற்றுக்கணக்கான கர்நாடக வக்கீல்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். சிலர் காரணம் தெரியாமல் பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
* ஆபரணங்கள் எடுத்து சென்ற வாகனங்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் வந்தபோது, நீதிமன்ற எதிரில் உள்ள சாலையின் இருபுறமுறம் வாகனங்கள் செல்வது நிறுத்தி வைத்தால், 15 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரகணக்கான வாகனங்கள் ஒரே சமயத்தில் நின்றதால், நெருக்கடி ஏற்பட்டது.
* கடந்த 19 ஆண்டுகளாக வழக்கு தொடர்பாக பெங்களூரு வந்து சென்ற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள், இனி பெங்களூரு வர வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறியதாவது, ‘சொத்து குவிப்பு வழக்கில் பட்டியலிடப்பட்ட 28 அம்சங்களில் தற்போது ஆபரணங்கள் மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 26 அம்சங்களில் 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரம் பட்டு சேலைகள், காலணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஏலம் விட வேண்டும் என்ற எனது சட்ட போராட்டம் தொடரும் என்றார்.
இதையும் படிங்க: தொடரும் இலாகா பறிப்பு... திமுக ஆட்சியில் அதிக முறை பந்தாடப்பட்ட ராஜகண்ணப்பன்...!