×
 

விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. போலீசாருக்கு அதிகரித்த பதற்றம்..!

சென்னையில் நில மோசடி விவகாரத்தில், போலீசார் உடன் வாக்குவாதம் செய்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் அதே பகுதியில் ஐஸ்கிரீம் கடை ஒன்றை கார்த்திகேயன் என்பவரிடமிருந்து சுமார் 49 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். பின்னர் ஆனந்தியின் திறமையால் அங்கு கடை நன்றாக லாபம் ஓடவே, பொறாமை கொண்ட கார்த்திகேயன் ஆனந்த இடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் இயந்திரத்தை, கார்த்திகேயன் மர்ம நபர்கள் மூலம் திருடி அதனை இயந்திரம் வாங்கப்பட்ட நபரிடமே விற்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். முன்னதாக இயந்திரம் காணவில்லை என ஆனந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கார்த்திகேயன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

தொடர்ந்து இது குறித்து ஆனந்தி காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் இந்தப் புகார் மனு தாழம்பூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: மறைந்திருந்து தாய், சேயை புகைப்படம் எடுத்த மர்ம நபர்.. தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு..!

இதனையடுத்து தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் கடந்த 2024 அக்டோபர் 28ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, வசிப்பிடத்தில் திருட்டு, கட்டுமான பராமரிப்பு விற்பனை தொடர்பான குற்றங்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனத் தாழம்பூர் காவல் நிலையத்திலிருந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், கார்த்திகேயன் காவல் நிலையத்தில் ஆஜராகததால் தாழம்பூர் போலீசார் அபிராமபுரம் சென்று கார்த்திகேயனிடம் விசாரணைக்காக அழைத்துள்ளனர். அப்போது கார்த்திகேயனுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயனை போலீசார் பிடித்து இழுத்த போது அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார். இதைப்பார்த்த கார்த்திகேயனின் குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை என்ற பெயரில் கார்த்திகேயனை போலீசார் இழுத்துச் சென்று தள்ளியதால் தான் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இதையும் படிங்க: பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்... ராமதாஸ் அதிரடி முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share