×
 

உதவியாளர் வைத்து லஞ்சம் பெற்ற மாஜி மாவட்ட வருவாய் அதிகாரி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்!

லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் 66 சென்ட் விவசாய நிலம் ஒன்றை 20.46  லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை அவரது மனைவி பெயரில் சந்திரபாபு செங்கல்பட்டு சார்பதிவாளர் மூலம் பதிவு செய்துள்ளார்.

சந்திரபாபு வாங்கிய நிலத்திற்கு நில வழிகாட்டி மதிப்பிற்கு முத்திரை தீர்வை நிர்ணயிக்க, முத்திரை தீர்வு தீர்வைப் பிரிவில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய மாவட்ட வருவாய் அதிகாரி மோகனசுந்தரம் என்பவருக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அப்போது விவசாய நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை சதுர அடிக்கு குறைப்பதற்கு மோகனசுந்தரம் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முன்னதாக சந்திரபாபு இந்த தொகையை கொடுக்க மறுத்ததையடுத்து, மோகனசுந்தரம் பணத்தை 60 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆவணங்களை திருப்பித் தர ரூ.5000 கேட்ட அதிகாரிகள்.. பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்..

 இந்த நிலையில், சந்திரபாபு இது குறித்து சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கவே, அவர்களின் அறிவுரைப்படி சந்திரபாபு ரசாயனம் தடவிய பணத்தை மோகனசுந்தரத்திடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு மோகனசுந்தரம் மற்றும் அவரது உதவியாளராக பணிபுரிந்த ரேவதி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். 

 துறை ரீதியாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, லஞ்ச பணத்தை பெறுவதற்கு ரேவதி என்பவரை அனுமதி இன்றி மாத ஊதியத்தில் மோகனசுந்தரம்  நியமித்துள்ளது விசாரணையில் அம்பலமானது. 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா, மோகனசுந்தரம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும்,

மேலும் இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான ரேவதி என்பவருக்கும் நான்கு ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை விதித்தும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். இது மட்டும் இன்றி குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை காப்பாற்றும் விதத்தில் புகார் சந்திரபாபு பொய்சாட்சியம் அளித்த குற்றத்திற்காக அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: 15 கோடி மோசடி.. வருவாய் அலுவலரை மடக்கிய போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share