×
 

போதையில் பஸ் கடத்தல்.. முன்னாள் டிரைவர்கள் அட்டூழியம்.. நெல்லையில் பரபரப்பு..!

நெல்லையில் மது போதையில் தனியார் பேருந்தை இருவர் கடத்திய நிலையில், பஸ்சில் படுத்திருந்த ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ் மீட்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில்  இருந்து வல்லநாடு - கலியாவூர் வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. இதனை நேற்று ஆம்ஸ்ட்ராங் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். நள்ளிரவில் அவருக்கு இரவு பணி முடிந்தது. இதனை அடுத்து நேற்று இரவு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்திவிட்டு, அசதியில் அதே பேருந்திலேயே படுத்து அவர் தூங்கினார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் பஸ் ஏதோ குலுங்குவது போல தூக்கத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு தெரிந்துள்ளது.  அதிகாலையில் யார் பேருந்தை குலுக்குவது என ஆம்ஸ்ட்ராங் திடீரென கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது பேருந்தை யாரோ இருவர் ஓட்டிச் செல்வது தெரிந்தது.

பயணிகள் யாரையும் ஏற்றாமல், பேருந்தை மட்டும் எங்கேயே இருவர் கடத்திச் செல்வது தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் சப்தம் போடாமல் மெதுவாக வெளியே எட்டிப் பார்த்துள்ளார். பஸ் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம்  நோக்கி செல்வது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பேருந்து கடத்திச் செல்பவர்களிடம், யார் நீங்கள்? பஸ்சை எங்கே எடுத்துட்டு போறீங்க என ஆம்ஸ்ட்ராங் சண்டை போட்டுள்ளார்.

அவர்கள் அப்போது தான் ஆம்ஸ்ட்ராங்க் பேருந்தில் இருப்பதை கவனித்துள்ளனர். உடனே ஆம்ஸ்ட்ராங்கை வெளியே தள்ள முயற்சி செய்துள்ளார். அவர்கள் இரண்டு பேர் இருந்ததால் எளிதில் ஆம்ஸ்ட்ராங்கால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ஆம்ஸ்ட்ராங் அவர்களுடன் போராடி பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார். இவர்கள் போராட்டம் காரணமாக சாலையில் பேருந்து தாறுமாறுமாக ஓடி உள்ளது. 

இதையும் படிங்க: நெல்லையை அதிர வைத்த சம்பவம்.. அறிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாள் காவல்..!

இந்த நிலையில் வசவப்பபுரம் காவல் சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் இதனை கவனித்து உள்ளனர். பேருந்தின் பின்னரே விரட்டி சென்று பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வசவப்பபுரத்தை சேர்ந்த ரமேஷ், குலவணிகர் புரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் ஆகியோர் பேருந்தை கடத்தியது தெரிய வந்தது.

இவர்கள் இதே பேருந்து நிறுவனத்தில் முன்னர்  ஓட்டுநர்களாக பணியாற்றி வந்துள்ளனர். மது போதையில் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், நாம் வேலை செய்த நிறுவனத்தின் பேருந்து தானே. எடுத்துச் செல்வோம். ஓனரிடம் பிறகு பேசிக் கொள்வோம் என அவர்களுக்கு உள்ளாக பேசி பேருந்தை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மீட்கப்பட்ட பேருந்தையும், ரமேஷ், வேல்ராஜ் ஆகிய இருவரும் சந்திப்பு காவல் நிலையத்தில் வசவப்பபுரம் காவல் சோதனை சாவடி போலீசார் ஒப்படைத்தனர். வாகனத்தை கடத்தியது மது போதையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரமேஷ் மற்றும் வேல்ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சந்திப்பு போலீசார் அவர்களை கைது செய்தனர். சந்திப்பு பேருந்து நிலையத்தில் நின்ற தனியார் பேருந்தை  மது போதையில் இருவர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. புத்தகப் பைகளை சோதனை செய்ய பள்ளிகளுக்கு ஆணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share