நீலகிரியில் வலுக்கும் எதிர்ப்பு; இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உதகை நகரில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாவட்டம், வெளி மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம், ஏப்ரல் 1-ந்தேதி முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் வர கட்டுபாடுகளை விதித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உதகை நகரில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரிக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வார நாட்களில் 6000 வாகனங்களும் சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 8000 வாகனங்களை மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்குமாறு மேலும் ஒரு கட்டுப்பாட்டையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பிரதமர் வரும்போது ஊட்டிக்கு செல்வதா.? மன்னிப்பு கேளுங்க.. முதல்வர் ஸ்டாலினை வசைபாடும் அண்ணாமலை!
இந்த இரண்டு உத்தரவுகளால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வணிகர்கள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த இ பஸ் கட்டாயம் என்ற உத்தரவை முழுவதுமாக ரத்து செய்ய கோரி கடந்த 2-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று இரவு உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மார்லிமந்து செல்லும் சாலை, பிங்கர் போஸ்ட், அதிக்கொரை சந்திப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்கள், வணிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் நீதிபதிகளுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்த சுவரொட்டிகளால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை ஒட்டியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா நோயாளியை வன்கொடுமை செய்த சம்பவம்..! ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை..!