இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே - பிரதமர் மோடி சந்திப்பு.. முதன்முறையாக ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!
இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
மூன்றுநாள் பயணமாக நேற்றிரவு இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் இன்று காலை கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. முப்படையினர் அணிவகுத்து வந்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தினர்.
அப்போது பிரதமர் மோடியை, இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஒரு மூத்த சகோதரனை சந்தித்த உணர்வினை அடைவதாக அப்போது அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினர் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, முதலீடுகள் ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. குழந்தையை தூக்கி கொஞ்சி குழந்தையாக மாறிய மோடி..!
இந்தியா - இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இருநாடுகள் இடையிலான ராஜீய உறவுகள் பலப்படும் என்று வெளியுறவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இலங்கையும், சீனாவும் ராணுவ விவகாரத்தில் சுமூகமாக இருந்து வருகின்றன. மேலும் இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா - இலங்கை இடையே கையெழுத்தாகும் ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனைத் தாண்டி 35 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையினரால் உண்டான கசப்பான அனுபவங்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முடிவு கட்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா நிதியுதவியுடன் இலங்கையில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை மோடியும், திசநாயகேவும் இணைந்து துவக்கி வைக்க உள்ளனர். மேலும் இந்தியாவின் நிதிநல்கையின் கீழ் உருவாக்கப்பட உள்ள சூரியஒளி மின்சக்தி திட்டத்திற்கு இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்ட உள்ளனர். பின்னர் இலங்கையில் உள்ள பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பலம் அதிகரிக்கும் வகையில் இலங்கை பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மிக உயரிய ‘மித்ரா விபூஷனா’ விருது: இலங்கை அரசு கெளரவம்..!