சுடச்சுட வந்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு… அடுத்த நொடியே மேடையில் வெடித்த கே.டி.ஆர்..!
இந்த வழக்கில் எப்படியும் தனக்கு சிறைத் தண்டனை உறுதி என நம்பும் கே.டி.ஆர், மன இறுக்கத்தில் இருந்து வருகிறார். தான் சிறை சென்றால், விருதுநகர் மாவட்ட அரசியல் நம் கையை விட்டுப்போய் விடும்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மோசடி விவகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி சிபிஐ ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. ஆகையால், இந்த வழக்கில் இருந்து தப்பவே முடியாது என்கிற மன அழுத்தத்தில் இருக்கிறார் கே.டி.ஆர். இன்று சற்று முன்பு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கிறது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: உனக்கு என்னடா தகுதி இருக்கு..? மேடையிலேயே அதிமுக மு.அமைச்சரை மிரட்டிய கே.டி.ஆர்..!
பண மோசடி வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கடந்த 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த ரவீந்திரன் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.ஆனால் முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள் என்று ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், “ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாடு அரசு சார்பில் 2 முறை வழங்கப்பட்ட ஆவணங்கள் மீது எந்த பதிலும் வரவில்லை” என்று வாதிடப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகாசி அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கே.டி.ஆருக்கு உச்சநீதிமன்றம் கடுமை காட்டியதை டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிப்போன அவர், அதன் பிறகே அதிமுக முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜானை ஒருமையில் பேசி ஆவேசமாகி உள்ளார்.
''நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை. நான் அதிமுகவில் குறுநில மன்னர்தான். எனக்கு பின்னல் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குழி பறிக்கும் வேலை நடக்கிறது'' என ஆவேசமாக பொறிந்து தள்ளி விட்டார் கே.டி.ஆர்.
நேற்று நடந்த ஒரு விழாவில், விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிக்க வந்தார். ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு, அருகே அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்கச் சென்றார். அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த ராஜேந்திர பாலாஜி, "யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாதா?’ எனக் கேட்டவாறு நந்தகுமார் கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கி, அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் எப்படியும் தனக்கு சிறைத் தண்டனை உறுதி என நம்பும் கே.டி.ஆர், மன இறுக்கத்தில் இருந்து வருகிறார். தான் சிறை சென்றால், விருதுநகர் மாவட்ட அரசியல் நம் கையை விட்டுப்போய் விடும். அடுத்து இந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கைகளுக்கு சென்று விடும். அடுத்து நமது அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய் விடும் என்பதால் மஃபா பாண்டியராஜன் மீதும், அவருக்கு பின்னால் இருப்பவர்கள் மீதும் தனது ஆவேசத்தை கக்கி வருகிறார் கே.டி.ஆர் என்கிறார்கள் விருந்துர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதையும் படிங்க: 16 ஆண்டுகள் "லிவ் இன்" உறவில் இருந்தாலும் கற்பழிப்பு புகார் கூற முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!