சிரமப்படாமல் இனி படிக்கலாம்..! 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் பாடப் பகுதி குறைப்பு..!
மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப் பகுதி குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வடிவமைத்த தமிழ் பாட புத்தகங்களை தான் தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும் இதனால் மாணவ மாணவிகள் படிப்பது சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர்கள் முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்வதற்கு போதுமான நேரம் இல்லாமல் போகிறது என்றும் தேர்வுக்காகத் தயாராவது கடினமாகி, மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்தப் பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி எப்போது? வெளியானது முக்கிய தகவல்!!
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாட புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகளை குறைக்கவும் பொருத்தமற்ற பாடப்பகுதிகளின் நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 மற்றும் 2ஆம் வகுப்பு பாட நூல்களில் தேவையான திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3,4,5 ஆம் வகுப்பு பாட நூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு பாட நூல்களில் உள்ள ஒன்பது இயல்களை 8ஆக குறைத்தும், 9, 10ஆம் வகுப்பு பாடநூல்களில் 7 இயல்களாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்துள்ளனர்.
தற்போது, சீரமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், 2025-26 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த பாடப்புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறை கொடுத்த ஷாக்... கவலையில் பள்ளி மாணவர்கள்!!