அங்க, இங்க கை வைப்பாரு.. மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர்.. இங்கிலீஷ் வாத்தியார் போக்சோவில் கைது..
திருவாரூரில் விடைத்தாள் திருத்த உதவிக்கு வருமாறு வீட்டிற்கு அழைத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சமீப காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவு வெளிவர துவங்கி உள்ளன. மாணவர்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் குட் டச், பேட் டச் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதே இதற்கான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகளில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டாலும், அந்த குற்றங்களை செய்பவர்கள் தொடர்ந்து அதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தொடர்கிறது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியை அந்த பள்ளி ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவாரூர் அருகிலுள்ள கொடிக்கால் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருவாரூர் நகரத்திற்குட்பட்ட மடப்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான சீனிவாசன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இந்த பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. இதையடுத்து ஆங்கில ஆசிரியர் சீனிவாசன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரிடம் விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி உள்ளார். தனது வீட்டிற்கு வந்து விடைத்தாள் திருத்துவதற்கு உதவும் படியும் கேட்டுள்ளார். ஆசிரியர் அழைத்ததின் பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கன்னி பெண்ணுடன் உறவு வைத்தால் ஆயுள் கூடும்? ஜோசியத்தை நம்பி சிறுமியை சீரழித்த தம்பதி.. 20 வருஷம் ஜெயில்..!
அப்போது சீனிவாசன் அந்த மாணவர்களிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உதட்டில் முத்தமிடுவது, பிறப்புறுப்பை தொடுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதனா மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவழியாக சமாளித்து அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் உடனடியாக மாணவர்கள் இது குறித்து நேற்று பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அடுத்த நாளே பள்ளிக்கு நேரடியாக வந்து இது குறித்து கேட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் ஒருவர் 1098 என்கிற குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்திய குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார அளித்துள்ளனர்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடந்த ஆறு மாத காலமாக சீனிவாசன் இது போன்று பல மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 7 மாணவிகளிடம் அத்துமீறிய 58 வயது தலைமை ஆசிரியர்.. மாணவிகளின் வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!