திருச்செந்தூரில் இரு தரப்பினர் இடையே மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு!
திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு. 10 க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை.
திருச்செந்தூர் கோகுல்நகரைச் சேர்ந்த முருகானந்தம் மகன் கண்ணன் என்பவர் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சோனகன்விளை அருகே உள்ள நீல்புரம் பகுதிக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் கல்கண்டு என்ற ஜெபராஜின் (58) இரு சக்கர வாகனத்தின் மீது கண்ணனின் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்ற லோடு ஆட்டோ உரசியது. இதில் தகராறு ஏற்பட்டதில் கல்கண்டு ஜெபராஜ் கண்ணனை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கேட்பதற்காக நேற்று இரவு கண்ணன் அவரது ஆதரவாளர்களுடன் நீல்புரத்திற்கு சென்று ஜெபராஜிடம் பேசி கொண்டிருந்தார். அப்பொழுது தகராறு ஏற்பட்டு ஜெபராஜ் தாக்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வரைபடத்திற்கு ரூ.8 கோடியா? சர்ச்சையில் சிக்கிய பிரபல கோவில்!!
அவரைப் பார்ப்பதற்காக ஜெபராஜ் மகன் நவீன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதன்பின் நவீன் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மற்றொரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது பேச்சுவார்த்தைக்காக வந்த 40 க்கும் மேற்பட்டோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கந்தவேல் (21), திருச்செந்தூரைச் சேர்ந்த கங்கைமுத்து மகன் நட்டார்ஆனந்த் (20), ஆண்ட்ரூஸ் நவீன் (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் வெட்டும், அப்பகுதியில் உணவு வாங்குவதற்காக வந்திருந்த தூத்துக்குடியை சேர்ந்த செந்தில்குமார் மகன் விஜய பிரகாஷ் ( 27) வலது காலில் வெட்டு காயங்களுடனும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் மேல் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து மற்றவர்களும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி திபு, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் இரவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் திருச்செந்தூர் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் வார விழா... இளம் படைப்பாளருக்கு விருது... சூப்பர் சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்...