கருணை அடிப்படையிலான வேலைக்காக 22 ஆண்டுகள் காத்திருப்பு.. அலட்சியம் செய்த ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி என்பவர் கடந்த 2001ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி, 2024ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் என்னை உளவுப் பார்த்தது.. முன்னாள் வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
என்ன கொடுமை பாருங்க, 2001-ல் தந்தை இறந்த பின்னர் மகனுக்கு வேலை தர 2023 ஆகி இருக்கிறது. அதாவது 22 ஆண்டுகள் அந்த நபர் நீதிமன்றத்தின் வாசலில் ஏறி இறங்கி இருக்கிறார். அப்படி போராடி பெற்ற வேலைவாய்ப்புக்கான உத்தரவும் 2 வருடங்களாக கையில் வந்து சேரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ஆட்சியரை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நமது நாட்டின் நீதிபரிபாலன முறையை பார்க்கும்போது நமக்கான நீதி, நம் பேரப்பிள்ளைகளுக்குத் தான் சென்று சேரும்போல...
இதையும் படிங்க: மோசடியாக பதிவு செய்யப்பட்ட BS-4 வாகனங்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..!